புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 21, 2023)

ஜனங்கள் போய்விடுவார்களோ?

2 தீமோத்தேயு 4:2

எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.


மாலைநேர உதவி வகுப்புகளை நடத்தும் கல்வி நிலையமொன்றில், குறிப்பிட்ட வகுப்பிலுள்ள மாணவனொருவனின்; தொல்லை அதிகரித்துக் கொண்டே சென்றதால், அந்த வகுப்பின் ஆசிரியர், கல்விநிலையத்தின் நிர்வாகிகளிடம் முறையீடு செய்தார். அந்த மாணவனானவனை ஒழுக்கநெறியில் நடத்ததும்படி அவர்கள் பெற்றோருக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார். அதைகேட்ட நிர்வாகிகளில் ஒருவர், ஆசிரியரை நோக்கி: சேர், அந்த மாணவனை நாங்கள் நெறிப்படுத்தினால், அவனுக்கு பின்னால் ஒரு மாணவர் குழுவே இருக்கின்றது. அவர்கள் யாவரும் எங்கள் கல்வி நிலையத்தைவிட்டு, வேறு இடத்திற்கு போய் விடுவார்கள். அதனால் எங்கள் கல்வி நிலையத்திற்கு பொருளாதார நஷ்டம் ஏற்படலாம். அத்தோடு உங்கள் சம்பளமும் பாதிக்கப்படலாம். அவர்கள் ஒழுங்காக மாதாந்த கட்டணத்தை செலுத்துகின்றார்கள். அவர் கள் கல்வி கற்காமல் தங்கள் காலத்தை வீணடித்தால், அது அவர்களுடைய பிரச்சனை. நாங்கள் அவர்களை சகித்துக் கொள்வது எங்களுக்கு இலாபமானது என்று கூறினார். அந்தப் பதிலை கேட்ட ஆசிரியர் அந்த நிர்வாகியின்மேல் கோபமடைந்தவராய். உங்கள் மகனானவனும் இப்படி காலத்தை விரயப்படுத்தினால், அவனை அப்படியே விட்டுவிடுவது நல்லதோ? அந்த மாணவனானவன், தான் செய்தது தவறு என்பதை அவன் அறிய வேண்டும். காலத்தை விரயப்படுத்தி பரீட்சையில் தோல்வியடைப் போகின்றான் என்பதை நாங்கள் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோரின் பிரயாசமும், எதிர்பார்ப்பும் வீணாய் போகின்றது என்று பெற்றோர் அறிய வேண்டும். அவர்கள் இந்த கல்வி நிலையத்தைவிட்டு செல்வதோ, இருப்பதோ அவர்களது தீர்மானம், ஆனால் ஆசிரியர்களும் நிர்வாகிகளும் சொந்த இலாபம் கருதாமல், நீதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறினார். பிரியமானவர்களே, இன்று சில இடங்களிலே, எண்ணிக்கையை காத்துக் கொள்ளுவதற்காக, தேவ நீதியையும், தேவசிட்சையையும் போதிக்காமல், பராமுகமாக தவறுகளை விட்டுவிடுகின்றார்கள். சில விசுவாசிகளும் அவ்விதமான இடங்களையே நாடிச் செல்கின்றார்கள். ஆனால், நீங்களோ, அவ்வண்ணமாக இருக்காமல், சத்தியத்தை தூய்மையாக பேசும் இடங்களை நாடு ங்கள். சுயஇலாபம் அல்ல, தேவ நீதியை நிறைவேற்றப்படும்படி, சத்தியமானது தகுந்த வேளையிலே யாவருக்கும் பிரசங்கிக்கப்படல் வேண்டும்.

ஜெபம்:

சில வேளைகளிலே என்னை சிட்சித்து நல்வழியில் நடத்தும் தேவனே, நீர் நியமித்தவர்கள் என்னை கண்டிக்கும் போது நான் இறுமாப்படையாமல், உம் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 6:60-69