புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 20, 2023)

உங்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன?

மத்தேயு 16:26

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?


அவன் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்தீர்களா? அவன் போகாத தேசங்கள் இல்லை. அவன் உண்ணாத உணவுகள் இல்லை. உயிரோடு இரு க்கும்வரை உல்லாசமாக வாழ்ந்து எல்லாவற்றையும் நன்றாகவே அனுபவித்தான். வாழ்ந்தால் அவனைப்பேல வாழ வேண்டும் என்று ஒரு மனி தனானவனனுடைய அடக்க ஆராதனையில்; காலஞ்சென்ற அந்த மனிதனானவனை பற்றி சிலர் பேசிக் கொண்டார்கள். இந்த உலகிலே உயிரோடிருக்கின்ற மனிதர்களில் பலர், வாழ்க்கையில் என்னத்தைக் கண்டோம்? என்னத்தை சாதித்தோம் என்று மனதில் புலம்பிக் கொள்கின்றார்கள். மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு சாராருமே தங்கள் மனதின் விருப்பங்களையும், அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதையே வாழ்க்கையின் மேலான குறிக்கோள் என்று எண்ணிக் கொள்கின்றார்கள். சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன? வெள்ளியையும் பொன்னையும், பொருள்களையும் சேகரித்தேன்;. எனக்கு முன் எருசலேமிலிருந்த எல்லாரைப் பார்க்கிலும் நான் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானேன்; என் ஞானமும் என்னோடேகூட இருந்தது. என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை பண்ணவில்லை. என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண் டாமென்று விலக்கவில்லை. என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது. சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. எல்லாம் மாயை என்று பிரசங்கி கூறுகின்றார். ஆம், பிரியமானவர்களே, இந்த உலகமும், அதிலுள்ளவைகள் யாவும் அழிந்து போகும். அதை வாஞ்சித்து, அதை பற்றிக் கொள்கின்றவர்க ளும் அப்படியே இருக்கின்றார்கள். ஆனால், இந்த உலகத்திலே வாழும் போது, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகின்றவனே தன் வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்ந்த மனிதனாக இருக்கின்றான். அவனுடைய வாழ்வின் வெற்றியானது, இந்த உலகத்திலே எதை கண் டேன், ருசித்தேன், சாதித்தேன் என்பதைக் குறித்ததல்ல, மாறாக அவன் தன் முழுபெலத்தோடு பரலோகத்திலுள்ள மேலானவைகளை தேடும்படி தன் காலத்தை முதலீடு செய்கின்றான். உலகிலே துன்பம் உண்டானாலும், அவனோ பரலோகிலே நித்திய பேரின்ப வாழ்வை கண்டடைவான்.

ஜெபம்:

எண்ணங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, இந்த உலகிலே வாழும்வரை பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதன் மேன்மையை நான் உணர்ந்து கொள்ளும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 2:1-11