புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 17, 2023)

இருதயத்தின் நிலைப்பாடு

யாக்கோபு 4:8

உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்


காலை வேளையிலே தன் வீட்டுப் பூந்தோட்டத்திலுள்ள மலர்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மனிதனானவன், தன் வீட்டின் வேலியின் அப்புறத்திலே இருந்த அயலவனொருவனின் காணியிலே இருந்த குப்பை கொட்டுமிடத்தில் இருந்த கழிவுகளிலிருந்து நாற்றமானது வீசுவதை நுகர்ந்து கொண்டான். தன் வீட்டின் தோட்டத்திலே அழகான மலர்களிலிருந்து வாசனையும், பக்கத்திலிருந்த காணியிலே அசுத்தமான குப்பை யிலிருந்து துர்நாற்றமும் எழுந்தது. தேனீக்கள் மலரை நாடி வந்தது. ஈக்கள் அசுத்தத்தை நாடி குப்பையிலே இருப்பதையும் அவதானித்தான். இந்த வேறுபட்ட நிலைமைகளை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு மனிதனானவன் தன் நிலத்தை அழகான மலர் செடிகள் வளருமிடமாகவும், அயலிருந்த மனி தனானவன் தன்னுடைய சொந்த நிலத்திலே அசுத்தங்கள் தேங்கிக் கிடக்குமிடமாகவும் வைத்திருந்தார்கள். இன்று மனிதர்கள் தங்கள் இருதயமாகிய நிலத்தை வெவ்வேறு காரியங்கள் குடிகொள்ளும் இடமாக பேணிப் பராமரித்து வருகின்றார்கள். நாமெல்லாரும் ஆண்டவராகிய இயேசுவை அறிய முன்னதாக இருந்த நாட்களிலே, நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். மாம்சத்தின் இச்சைகள் நம் இருதயத்தில் குடி கொள்வதற்கு நாம் இடம் கொடுத்திருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்;. எனவே நாம் மறுபடியும் நம்முடைய இருதயத்தை மாம்ச இச்சைகள் தங்குவதற்கு வழிவகுத்து கொடுப்பது ஏற்புடையதாக இருக்குமா? மாம்சத்தின் கிரியைகளாகிய விபசாரம், வேசி த்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் எங்கள் வாழ்க்கையில் இல்லை என்று மேன்மைபாராட்டும் சில தேவபிள்ளைகளோ, பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள் தங்கள் இருதயத்தில் நிலைகொள்வதற்கு வழிவகுத்துக் கொடுக்கின்றார்கள். பிரியமானவர்களே, கர்த்தருடைய பாடுகளை அதிகமாக தியானம் செய்யும் இந்த நாட்களிலே, நம்முடைய இருதயத்தை பயன் தரும் நிலமாக பரிசுத்தப்படுத்தி, பண்படுத்தி, பராமரித்து கொள்வோமாக.

ஜெபம்:

திவ்விய சுபாவத்திற்கு பங்காளிகளாக என்னை அழைத்த தேவனே, என் இருதயத்தை நான் மறுபடியும் மாம்ச இச்சைக்கு இடங் கொடாமல், பரிசுத்தப்படுத்தி காத்துக் கொள்ள என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 6:12-13