புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 14, 2023)

எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?

யோனா 4:4

அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்.


அசீரிய ராஜ்யத்தின் தலைநகராக நினிவே பட்டணம் இருந்தது. யார் இந்த அசீரியர்கள்? நோவாவின் குமாரனாகிய சேம் என்பவனுடைய, சந்ததியினூடாக உண்டானவர்களே. இவர்கள் மிகவும் பலத்தவர்களும், கெடிதும் கொடியதுமான படையையுடையவர்கள். இவர்கள் அநேகம் ஜாதிகளை அழிக்கவும், சங்கரிக்கவுமே தங்கள் மனதிலே நினைவு கொண்டிருந்தார்கள். பெருமையான நெஞ்சின் வினையும், கண்களின் மேட்டிமையான பார்வையும் இவர்களிடமிருந்தது (ஏசாயா 10:5-34). அசீரியர்கள் இஸ்ரவேல் ஜனங்களை பொறுத்த வரையில், புறஜாதியரும், பகைஞருமாக கணிக்கப்பட்டிருந்தார்கள். நினிவே பட்டணத்தின் அக்கி ரமம் மிகுதியானதினால், இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகிய யோனாவின் வழியாக நினிவேக்கு சீக்கிரத்தில் வரவிருக்கும் நியாத்தீர்ப்பை குறித்த எச்சரிப்பை வழங்கினார். யோனாவோ, தேவனாகிய கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிந்து அங்கு போதவற்கு முதல்முறை மறுத்தான். பின்பு, நினிவேக்கு சென்று அந்த எச்சரிப்பின் செய்தியை கூறினார். நினிவே மக்களும், அதிகாரிகளும், ராஜாவும், தங்களை தாழ்த்தி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு மனந்திரும்பி, உபவாசித்து, கர்த்தரை நோக்கி பார்த்தார்கள். அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய் வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார். ஆனால், கர்த்தருடைய மனதுருக்கம், யோனாவிற்கோ விசனமாயிருந்தது. அவன் கடும் கோபம் கொண்டான். தான் மரித்துப் போனால் நலமாயிருக்கும் என்று கூறினான். அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கி றது நல்லதோ என்றார்;. பிரியமானவர்களே, நாம் ஆராதிக்கின்ற தேவனாகிய கர்த்தர், நம்முடைய பகைஞர்களுக்கும் தயவு செய்யகின்றார் என்பதை மறந்து போய்விடாதிருங்கள். அவர்கள் மேல் நீடியபொறுமையுள்ளவராயிருக்கின்றார். அக்கிரமம் மிகுதியாகும் போது எச்சரிப்பை வழங்குகின்றார். உண்மையாக மனந்திரும்புகின்ற எந்த ஆத்தமாவையும் அவர் ஆதரிக்கின்றார். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்க ளைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். என்ற வாரத்தைகளை மனதில் பதியவைத்து, பகைஞரின் அழிவையல்ல, அவர்களுடைய மனந்திரும்புதலை எதிர்பார்த்து, அவர்களுக்காக எப்பொழுதும் ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறன்ற தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய கிருபையினாலே நான் நிலைநிற்கின்றேன் என்பதை நான் ஒரு போதும் மறந்து போகாதபடிக்கு நீர் கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:20-21