புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 13, 2023)

விலையேறப்பெற்ற இயேசுவின் இரத்தம்

1 யோவான் 1:9

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.


உன்னுடைய முன்னைய வாழ்க்கையையும் துன்மார்க்கமான வழியையும் நான் மட்டுமல்ல, இந்த ஊரே நன்றாக அறிந்திருக்கின்றது. நீ உன் குடும்பத்தாரை அவமானப்படுத்தி இந்த ஊரையும் ஏமாற்றிய செயல்களை நீ மறந்து போய், வேதத்தை கையிலேந்திக் கொண்டு சாதுவை போல பேசினால் நாங்கள் உன் பழைய வாழ்க்கையை மறந்துவிட்டோம் என்று எண்ணங்கொண்டாயா என்று நற்செய்தியை அறிவிக்க வந்த ஒரு சகோதரனைப் பார்த்து, குறிப்பிட்ட அந்த ஊரிலே சன்மார்க்கன் என்று கருதப்பட்ட மனிதனொருவன் கடிந்து கொண்டான். அந்த சகோதரனானவன், ஆண்டவர் இயேசுவை அறிய முன்பு தன் கண்போன போக்கிலே வாழ்ந்தது உண்மையே. ஆனால், அது அவனுடைய பழைய வாழ்க்கை. இப்போது அவன் தன் பாவங்களை விட்டு மனந்திரும்பி, மீட்பராகிய இயேசுவிடம் தன் வாழ்க்கையை முழுவதுமாக ஒப்புக் கொடுத்துவிட்டான். விலையேறப்பெற்ற இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, அவனை சுத்திகரித்தது. இப்போது அவன் தன் மாம்ச இச்சைகளின்படி தனக்கு இஷ்டமானவைகளை செய்யாமல், தன்னை மீட்டுக் கொண்ட பிதாவாகிய தேவனின் சித்தத்தை செய்ய தன்னை ஒப்புக் கொடுத்து விட்டான். ஆனால், அவனுடைய மனந்திரும்புதலும், ஆண்டவர் இயேசு வினுடைய பாவ மன்னிப்பும் அந்த குறிப்பிட்ட ஊரிலே வாழ்ந்த சன்மார்க்கனுக்கு விசனமாகவே இருந்தது. மனந்திரும்புதலும், பாவமன்னிப்பும் இந்த உலக நீதியின்படி மனிதர்கள் எல்லைகளை வைக்கலாம். அதாவது, அறிந்தோ, அறியாமலோ, நினைத்தோ, நினையாமலோ பாவ சேற்றில் கிடக்கும் மனிதர்கள் தங்கள் வழிகளை விட்டு திரும்பி, சமுதாயத்துடன் இணைந்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் இந்த உலகிலே ஏற்படலாம். ஆனால், தேவனுடைய ராஜ்யத்திலே மனந்திரும்பி, ஆண்டவர் இயேசுவை நோக்கிப் பார்க்கின்ற யாவருர் மேலும்; அவர் கிருபையை பொழிகின்றார். புதிய வாழ்வை கொடுக்கின்றார். அதுமட்டுமல்ல, நல்வழியிலே நடக்கின்ற அந்த சன்மார்க்கனும், தன்னைப் போல மாற வேண்டும் என்று ஆண்டவர் இயேசுதாமே நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார்.

ஜெபம்:

உம்முடைய திவ்விய அன்பினாலே என்னை சேர்த்துக் கொண்ட தேவனே, என் இருதயம் உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவைப் போல மாறும் படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 15:9-32