புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 08, 2023)

நன்மை உண்டாகும்படி காத்திரு

சங்கீதம் 37:5

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்


தன் தந்தையானவர் வீட்டிலே செல்லப் பிள்ளையாக வாழ்ந்து வந்த மகனானவன், இப்போது பன்றிகள் மத்தியிலே, உண்ண ஆகாரமற்ற வற்வனாக இருந்தான். பன்றிகள் உண்ணும் தவிட்டைக் கூட அவனுக்கு ஒருவனும் கொடுக்கவில்லை. இந்த நிலைமைக்கு காரணம் யார்? அவன் பெற்றோரா? சகோதர்களா? வீட்டு வேலைக்காரரா? அவன் தன் மனவிருப்பங்களை நிறைவேற்ற வீட்டிலே அனுமதி அவனுக்கு கிடைக்கவில்லை. தன் போக்கில் வாழ அவனது தந்தை வீட்டில் அவனுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. எனவே அவன் தன் இஷ்டப்படி வாழ்வதற்காக தந்தை வீட்டைவிட்டு வெளியே றினான். தன் மாம்ச ஆசை இச்சைகளை நிறைவேற்றி, துன்மார்க்க வழிகளிலே சுகபோகமாக வாழ்ந்தவனுக்கு இப் போது நண்பர்களோ, உறவினர்களோ, அவனோடிருந்த விபசாரிகளோ அவனோடு இல்லை. சமுகத்தை விட்டு புறம்பாக்கபட்டு, பன்றிகள் மத்தியிலே பட்டினியோடு வாழும் போதே அவனுடைய புத்தி தெளிந்தது. தன் தந்தையிடம் திரும்பிச் செல்ல தீர்மானித்தான். இது அவன் தந்தையுடைய தன் செல்லப் பிள்ளையைக் குறித்த பூரணமான திட்டமா? இல்லை. இது அவன் தெரிந்து கொண்ட வழி. எனினும், தந்தையானவர், அவன் புத்தி தெளிந்து வீடு திரும்பும் நாளையொட்டி, தன் இதயக் கதவை திறந்து வைத்திருந்தார். பிரியமானவர்களே, இவ்வண்ணமாகவே, சில தேவ அழைப்பை பெற்ற பிள்ளைகள் கூட, தங்கள் சொந்த இலக்குகளை நிறைவேற்றும்படி, தங்களைத் தாங்கள் குடும்பத்தைவிட்டு, சபையை விட்டு, தேவனைவிட்டு புறம்பாக்கும்படி தங்கள் பார்வைக்கு நன்மையாக தோன்றும் வழிகளை உண்டு பண்ணுகின்றார்கள். தங்கள் வழிகளை நியாயப்படுத்த பல காரணங்களையும் சுட்டிக் காட்டிக் கொள்வார்கள். உண்மை தெளிவாகும் நாள்; ஒன்று உண்டு. வெளிப்படாமல் மறை ந்திருப்பவைகள் ஒன்றுமில்லை. உண்மை என்ன என்பது தெளிவாகுவதை விட, அவர்கள் புத்தி தெளிந்து, மனம்திரும்பி, தேவனண்டை யிலே மறுபடியும் கிட்டிச் சேர்ந்து, அவருடைய வழியிலே வாழ்வதே அதிக மேன்மையானது. எனவே, சிலர் வெவ்வேறுவேறு காரணங்களுக்காக தங்களைத் தாங்களே புறம்பாக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் நிமித்தம் நீங்கள் உங்கள் வீட்டிலோ, சபையிலோ கலகக்காரராக மாறாதப டிக்கு, தேவ சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறும்படிக்கு நம்பிக்கையோடு காத்திருங்கள்.

ஜெபம்:

உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப்பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணும் தேவனே, நான் எப்போதும் உம்மை நம்பி உம்முடைய வழியில் செல்ல கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-3