புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 28, 2023)

கர்த்தரால் நியமனம் பெற்றவர்கள்

யாக்கோபு 4:10

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.


ஒரு வாலிபனானவன், பட்டப்படிப்புக்களை முடித்துக் கொண்டு, பல ஆண்டுகளுக்கு பின்னர் தான் வளர்ந்த ஊருக்குத் திரும்பினான். அவ னுடைய தந்தையார் அவனை நோக்கி: தம்பி, உன்னுடைய பாடசாலை ஆசிரியர் உன்னை சந்தித்து உன் விவகாரங்களைப் பற்றி பேச விரும்புகின்றார் என்று கூறினார். அதற்கு அந்த வாலிபனானவன்;: நான் எனக்கு கற்பித்துக் கொடுத்த எல்லா ஆசிரியரையும் விட மிக அதிகமாக படித்து விட்டேன். சர்வதேச மட்டத்திலே பல கலாசாலைகளினாலே அங்கீகாரம் பெற்ற பட்டங்களை பெற்று, பல பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர்க ளோடு ஒன்று கூடல்களிலேயும் கலந்து வருகின்றேன். இந்த ஊரில் உள்ள ஆசிரியர்கள்; தன்னிடம் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும் என்ற தொனியுடன் இறுமாப்பாய் மறுமொழி கூறினான். அதை கேட்டு மிகவும் மனவேதனை அடைந்த தந்தையார், அவனை நோக்கி: மகனே, நீ எவ்வளவும் கற்றிருக்கலாம். எப்படிப்பட்ட அந்தஸ்துள்ளவனாகவும் இருக்கலாம். ஆனால், அவர் உனக்கு நியமிக்கப்பட்ட பாடசாலை ஆசிரியர். நீ யார் என்றும்? உன்னுடைய பெலவீன ங்கள் என்னவென்றும், உன் மழலை வயதிலிருந்தே அவர் அறிந்திருக்கின்றார் என்பதை மறந்து விடாதே. அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை என தன் மகனானவனை அந்த தந்தையார் கடிந்து கொண்டார். ஆம், பிரியமானவர்களே, மனத்தாழ் மையும், நன்றியறிதலுள்ளவர்களுமாயி ருப்பது மனிதனுடைய நல் வாழ் க்கைக்கு மிகவுமே இன்றியமையாதது. இந்த நாட்களிலே, சபை ஐக்கி யங்களிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதை நாம் காணக்கூடிய தாகவே இருக்கின்றது. சபை மேய்ப்பனானவரைவிட நான் அதிமாக கற்றுவிட்டேன். சபை மூப்பர்களைவிட நான் தேறியிருக்கின்றேன். வேதாகம கல்லூரியிலே உயர்படிப்புக்களை முடித்துவிட்டேன். இவர்க ளுக்கு கற்பிக்கத் தெரியாது. ஊர் நடப்புக்களைக்கூட அறியார்கள். நாகரீகம் அறியாதவர்கள் என்று மேட்டிமையாக சிலர் பேசிக் கொள்வார்கள். ஆனால், சபையின் மேய்ப்பரானவர், சர்வ வல்லமையுள்ள தேவ னாலே நியமிக்கப்பட்ட தேவ ஊழியன் என்பதை ஒருபோதும் மறந்து போய்விடாதிருங்கள். ஆண்டவராகிய இயேசு இந்த உலகிலே இருந்த நாட்களிலே வேதத்தை கற்றுத் தேர்ந்த மதத்தலைவர்கள் அநேகர் இருந்தார்கள். ஆனால், ஆண்டவர் இயேசு யார் என்பதை அவர்களது கல்வியறிவானது அவர்களுக்கு வெளிப்படுத்த முடியவில்லை.

ஜெபம்:

பரலோக தேவனே, நான் அடைந்தாயிற்று, முற்றிலும் தேறினவனானேன் என்று மனதிலே பெருமை கொள்ளாமல், மனத்தாழ்மையோடு தேவ ஆலோசனைக்கு செவி கொடுக்கும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 15:1-5