புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 27, 2023)

உங்கள் மனநிலை எப்படி இருக்கின்றது?

எபிரெயர் 12:15

யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியானவன், சபையிலே ஞாயிறு தோறும் பிரசங்கிக்கபடும் தேவ செய்தியை தவறாமல் கவனமாக கேட்டு வந்தான். அந்த தேவ செய்தி பதிவு செய்யப்பட்டு, சபையார் யாவரும் கேட்கும்படிக்கு ஒலிநாடாககளில் பதிவு செய்து கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் மேய்ப்பரானவர், கூறிய தேவ செய்தியானது, அந்த விசுவாசியானவனின் குடும்பத்தில் இருந்த குறையை குறித்ததாக இருந்ததால், அந்த விசுவாசியானவன் மிகவும் மனக் கசப்படைந்தான். அன்றைய நாளிலிருந்து, அவன் தேவ செய்தியின் பதிவை கேட்கும் போது, மேய்ப்பரானவர் ஏதாவது தவறாக கூறியிருக்கின்றாரா என்று மிகவும் கவனமாக முழு தேவ செய்தி யையும் கேட்டுக் கொள்வான். இதினிமித்தம், அவன் தேவ செய்தியை கேட்பதன் நோக்கமானது மாறிவிட்டது. தனக்கு புரியாத காரியங்களை போய் மேய்ப்பரிடம் கேட்டு உறுதிசெய்து கொள்ளவதற்கு பதிலாக, தேவ செய்தியில் தவறு உண்டு என்று, தனது குடும்பத்தினர் பிள்ளைகள், முன்னிலையிலும், தனக்கு பிடித்த சக விசுவாசிகள் மத்தியிலும் விமர்சிக்க ஆரம்பித்தான். வாழ்வு தரும் தேவனுடைய நித்திய வார்த்தைகளை வழக்குக்கும் வாதுக்குரியதாக மாற்றிவிட்டான். அவன் பிள்ளைகளும், தங்கள் தந்தையை திருப்த்திபடுத்தும்படி மேய்ப்பர் கூறும் நல்லாலோசனைகளை அசட்டை செய்ய ஆரம்பித்தார்கள். அந்த விசுவாசியானவன் விதைத்த விதை அவனுடைய இருதயத்திலும், அவன் பிள்ளைகளுடைய இருதயத்தில் வளர்ந்து கொடுக்கும் விளைவு எப்படியிருக்கப் போகின்றது என்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். பிரியமானவர்களே, அந்த விசுவாசியா னவனின் மனதிலே எப்போது பிரிவினை உண்டாயிற்று? அவன் எப் போது கசப்பான வேரை தன் இருயத்தில் அனுமதித்தானோ, அந்த கண பொழுதிலே அவனுக்குள் பிரிவினை உண்டாயிற்று. அந்த பிரிவினை வெளியரங்கமான செயல்களை நடப்பிப்பதற்கு அவனுக்குள் இருக்கும் மாம்ச சிந்தையானது சந்தர்ப்பத்தை தேடி காத்துக் கொண்டிருக்கும். சில வேளைகளிலே குறைவுகள் நிறைவுகள் நம் உள்ளத்திலும், வீட்டி லும், சபையிலும், ஊரிலும், தேசத்திலும், உலகத்திலும் உண்டாவதுமுண்டு. ஆனால், சில விசுவாசிகளோ தங்கள் உள்ளத்திலுள்ளவைகளை பாராமுகமாக விட்டுவிட்டு, ஊரையும், உலகையும் திருத்துவதற்கு முந்திக் கொள்கின்றார்கள். நாம் அப்படியிருக்கலாகாது, கசப்பான எந்த விதையும், எந்த காரணத்திற்காகவும், நமக்குள் வேர்கொள்ள அனுமதிக்கக் கூடாது.

ஜெபம்:

நல்லாலோசனை தந்து வழிநடத்தும் தேவனே, நீர் எனக்கு தரும் தேவ கிருபையை நான் உதாசினப்படுத்தாதபடிக்கு, என் குறைகளை விட்டு மனந்திரும்பும் உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:16-17