புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 21, 2023)

ஐக்கியங்களும் ஒன்று கூடலும்

2 கொரிந்தியர் 7:1

பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.


ஒரு விசுவாசியானவன் விசேஷ பிறந்த நாள் விருந்திற்காக உறவினருடைய வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே அவருடைய நெருங்கிய நண்பர்களும் வந்திருந்தார்கள். அந்த இடத்திலே மதுபானமருந்துதலோ, சீர்கேடான களியாட்டங்களோ ஒன்றும் இடம்பெறவில்லை. யாவரும் ஒழுக்கமுள்ளவர்க ளாகவே காணப்பட்டார்கள். ஆனாலும் அந்த இடத்திலே அரசியலைக் குறித்த விவாதம் ஏற்பட்டுவிட்டது. சிலர், தாங்கள் வாழும் தேசத்தையும், ஆளும் அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் குறித்து, சாபமான வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். வேறுசிலர் தேசத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கும், குழப்பங்களுக்கும் காரணம் என்ன என்பதை தங்கள் தங்கள் உலக அறிவிக்கேற்றபடி தங்கள் கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்திலே, சர்வத்தையும் படைத்த தேவனாகிய கர்த்தரைக் குறித்த சிந்தனைக்கோ, பேச்சுக்கோ இடமிருக்கவில்லை. அங்கே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தாராளமாக இருந்தது. இது பிறந்தநாள் விருந்து, கொண்டாட்டமாகையால் ஆகவே, தகாதவைகளை நிறைவேற்றி, ஸ்தோத்திரஞ்செய்தலை நாம் விட்டுவிட முடியுமோ? சற்று சிந்தித்துப் பாருங்கள். (எபேசியர் 5:4). இந்தப் பூமியிலே சபை ஐக்கியம், ஜெப கூட்டங்கள் சாராத ஒன்றுகூடல் யாவும் தீமையானது என்று நாம் தீர்த்துவிட முடியாது. அரசாங்கம், சமுகம், குடும்பம், வேலை, பாடசாலை சார்ந்த கடமைகளும் நமக்கு உண்டு. அவற்றை நாம் தேவ வார்த்தைகளின்படியே நிறைவேற்றி முடிக்க வேண்டும். ஆனாலும், இப்படிப்பட்ட ஒன்றுகூடலோ அல்லது இதர ஐக்கியங்களோ நமக்கிருந்தாலும், அவை எல்லாவற்றிலும் நாம் கிறிஸ்துவுக்கென்று வேறு பிரிக்கப்பட்டவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. கிறிஸ்துவைப் பிரியப்படுத்தாத நண்பர்கள், உறவினர்கள், சகவிசுவாசிகளுடனான ஐக்கியங்களைக் குறித்து நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும். மரித்தோர் உயிர்தெழுதலையும், நித்திய வாழ்வையும் குறித்த எண்ணமற்றவர்கள், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று வாழ்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களுடைய ஒன்றுகூடலிலும், ஐக்கியங்களிலும் நீங்கள் எதைக் குறித்து அவர்களோடு சம்பாஷணை செய்வீர்கள்? சிந்தித்துப் பாருங்கள். மோசம் போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். எனவே, விசுவாசமார்க்கத்தாகிய நாம், இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம்தரிக்காமல், பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழ என்னை வேறுபிரித்த பரிசுத்த தேவனே, உறவிற்காகவோ, நட்பிற்காகவோ நான் என் ஆத்துமாவை கெடுத்துக் கொள்ளாமல் இருக்க எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:1-2