புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 03, 2023)

யார் உங்கள் அதிகாரி?

யோபு 42:2

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்


சில வருடங்களுக்கு முன், 'தேவன் எனக்கு நன்மை செய்தார். என் ஜெபத்தை கேட்டு எனக்கோர் நல்ல வேலையை தந்தார்' என்று சபையிலே சாட்சி பகிர்ந்த வாலிபனானவனொருவன், கம்பனியிலே நடக்கும் சில சம்பவங்களால் மிகவும் குழப்பமடைந்திருப்பதை அவனுடைய தந்தையார் கண்டு கொண்டார். தந்தையானவர், தன் மகனை அழைத்து, அவனோடு தயவாக பேசினார். மகனே, யோசேப்பு என்னும் வாலிபனானனுக்கு தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந் தார். ஆனால், அவனோ தன் உடன் பிறப்புக்களால் நிராகரிக்கப்பட்டு, அந்நியர் கையிலே அடிமையாக விற்கப்பட் டான். அவன் எகிப்துக்கு கொண்டு செல் லப்பட்டு, போர்த்திபார் என்னும் அதிகாரியின் வீட்டு வேலைக்காரனாக பணி புரிந்தான். போர்த்திபாரின் மனைவியானவள் அவனுக்கு தீமை செய்ய திட்டமிட்டாள். அதனால் அவன் அரச சிறையிலே போடப்பட்டான். அவன் சிறையிலிருக்கும் போது, அவனிடம் நன்மை பெற்றவர்களோ அவனை மறந்து போனார்கள். இந்த அதிகாரங்கள் எல்லாம், தேவனாகிய கர்த்தர் யோசேப்பை குறித்து வைத்திருந்த திட்டத்தை மாற்ற முடிந்ததா? அநேகர் அவனுக்கு தீமை செய்ய நினைத்தார்கள். ஆனால், அவன் தன் தேவனாகிய கர்த்தரை இறுகப் பற்றிக் கொண்டான். அவரோ, தீமைகள் அனைத்தையும் நன்மையாக மாற்றி, தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றி, அவனை எகிப்தின் இரண்டாவது அதிகாரியாக்கினார். எனவே, உன் சக ஊழியர்கள், அதிகாரிகள் செய்யும் முறையற்ற காரியங்களை கண்டு நீ விரக்தியடையாதே. பொறுமையாயிருந்து உன் வேலையை கவனமாக செய். தேவன் முன் குறித்த காலத்திலே உன்னைக் குறித்த திட் டத்தை நிறைவேற்றுவார் என்று அறிவுரை கூறினார். ஆம் பிரியமானவர்களே, வீட்டிலோ, சபையிலோ குழப்பமாக இருக்கின்றதா? உங் களை அழைத்தவர் யார்? அவர் உண்மையுள்ளவரா? ஆவர் சொன்னதை செய்கின்றவரா? அவர் உங்களைக் குறித்து வைத்திருக்கும் திட்ட த்தை யாரால் தடுத்து நிறுத்த முடியுமா? சற்று சிந்தியுங்கள். உங்களை அழைத்தவர் சர்வ வல்லமையுள்ள தேவனாக இருந்தால், கலக்கம் எதற்கு? எந்த அதிகாரங்களும் தேவ சித்தத்தை மாற்ற முடியாது. எனவே, அசையாமல், உறுதியுடன், தேவன் தந்திருக்கும் பொறுப்புக்களை நிறை வேற்றுங்கள். வாக்குரைத்தவர் உண்மையுள்ளவராக இருக்கின்றார். அவர் உங்களை குறித்த காரியத்தை நிச்சயம் நிறைவேற்றி முடிப்பார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நான் உம்முடைய வல்லமையைக் குறித்து சந்தேகப்படாமல், அழைத்த அழைப்பில் நிலைத்திருந்து, பெற்ற பணியினை செய்து முடிக்க பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:5-12

Category Tags: