புதிய நாளுக்குள்..

தியானம் (தை 12, 2023)

கிறிஸ்துவின் வாசனை

யோவான் 12:3

அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.


பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. இந்த சம்பவம் நடந்த இடத்திலே, ஆண்டவராகிய இயேசுவோடு கூட, அவருடைய சீஷர்களும், லாசருவுடைய வீட்டாரும் வேறு சிலரும் இருந்தார்கள் (மாற்கு 14:4, மத்தேயு 26:8). ஆண்டவர் இயேசுவின் சீஷரில் ஒருவனும், திருடனும், அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்தும் அங்கே இருந்தான். அந்த விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலத்தை கொண்ட வெள்ளைக்கல் பரணியைக் உடைத்த போது, அந்த தைலத்தின் வாச னையானது வேற்றுமையில்லாமல் அங்கிருந்த யாவருகுமே வீசிற்று. பிரியமானவர்களே, கிறிஸ்தவ வாழ்வின் வாசனையும் அந்த விலையேறப்பெற்ற பரிமள தைலத்திற்கு ஒப்பாயிருக்கின்றது. கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே நாம் வாழ்கின்றோம். துன்மார்க்கரும், சன்மார்க்கரும், நாஸ்திகர்களும், மதவைராக்கியமுள்ளவர்களும், தேவனுடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்டவர்களும் நம்மைச் சூழ இருக்கின்றார்கள். நாம் அவர்கள் மத்தியிலே வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஒத்த வேஷம் தரிக்காமல், குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாக, நம்மை நோக்கி வரும் எதிரிடையான சூழ்நிலைகள் ஒவ்வொன்றிலும் நாம் நம்முடைய பழைய மனுஷனுடைய மாம்ச சுபாவங்களின் துர்நாற்றத்தை முற்றிலும் நம்மை விட்டு அகற்றிவிட்டு, கிறிஸ்துவின் திவ்விய சுபாவங்களின் வாசனையை நாம் வீச வேண்டும். விலை மதிக்கமுடியாத மீட்பர் இயேசுவின் இர த்தத்தினாலே மீட்பை பெற்றவர்களாகிய நாம், இடத்திற்கு இடம், மனிதர்களுக்கு மனிதர்கள் நாம் நம்முடைய சுபாவங்களை மாற்றாமல், வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், சபையிலும், உறவுகள் நண்பர்கள் மத்தியிலும், வெளி இடங்களிலும் திவ்விய சுபாவங்களிலே வளர்ந்து பெருகின்றவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

விலையேறப்பெற்ற திரு இரத்தத்தினாலே என்னை மீட்ட தேவனே, கோணலும் மாறுபாடான உலகத்திலே உமக்கு நறுமணம் வீசும் சாட்சியாக வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:13-14