புதிய நாளுக்குள்..

தியானம் (தை 09, 2023)

கிறிஸ்துவை தரித்தவர்கள்

மத்தேயு 5:16

மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.


ஒரு வீட்டின் சமையலறையானது நேர்த்தியாக ஒழுங்குபடுத்தப்பட்டு, சமையல் பாத்திரங்கள், சாதனங்கள் மற்றும் சமையல் பொருட்கள் யாவும் அதற்கென ஏற்படுத்தப்பட்ட இடங்களிலே ஒழுங்காக வைக்கப்பட்டு எப்போதும் பார்வைக்கு அழகாக காட்சியளித்தது. ஆனால், அந்த சமையலறை அழுக்காகிவிடும் அல்லது சமையல் மணம் வீசும் என்று அங்கே சமையலேதும் நடைபெறுவதில்லை. சமையலறையானது சுத்தமாகவும், அழகாகவும் இருப்பது நல்லது ஆனால் அது ஏற்படுத்தப்பட்ட முக்கிய நோக்கமானது நிறைவேறாது போனால், அதாவது அங்கே சமையல் செய்ய முடியாததாக இருந்தால், அது அதன் உபயோகத்திற்கு உகந்ததல்ல. அது ஒரு கண்காட்சிப் பொருளாகவே இருக்கும். இன்றைய நாளிலே இந்த சம்பவத்தை மையமாக வைத்து, நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க முடியும். ஒருவன் கிறிஸ்தவ அடையாளங்களை தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு, வீட்டில் வேத வார்த்தைகளை எழுதி வைத்து, பரிசுத்த வேதாகமத்தை காட்சிப் பொருளைப் போல வீட்டில் வைத்துக் கொண்டு, ஆலயத்திற்கு சென்று வருவதால் மட்டும், உண்மையான கிறிஸ்தவனாக இருக்க முடியாது. அவை பார்வைக்கு மட்டும் அழகாகவும் நேர்த்தியாவும் இருக்கும். ஆனால், அவன் உண்மையான கிறிஸ்வனாக வாழ்வதற்கு, அவன் தன் நாளாந்த வாழ்விலே எதிர்நோக்கும் பலவிதமான சூழ்நிலைகளில், கிறிஸ்துவின் சுபாவங்களை தன்னில் வெளி க்காட்டுகின்றவனும், பரீட்சைக்கு நிற்கின்றவனுமாக இருக்க வேண்டும் அவைகளினாலே கிறிஸ்துவின் அச்சடையாளங்களை தன்னில் தரித்துக் கொண்டிருக்கின்றவனாவும் வாழ வேண்டும். அப்படி அவன் வாழவிடில், அவன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தரித்திருந்தும், நூதனசாலையிலே இருக்கும் பார்வைக்கு அழகான கண்காட்சிப் பொருளைப் போல காணப்படுவான். நாமோ, பாடுகள் நிறைந்த கோணலும் மாறு பாடுமானதுமான உலகத்திலே, ஆண்டவர் இயேசுவின் சிந்தையைத் தரித்தவர்களாக, அவருடைய திவ்விய சுhபவங்களை நமது குறைவிலும், நிறைவிலும், வேதனையிலும், சோதனையிலும் நம் நற்கிரியைகள் வழியாக வெளிப்படுத்த வேண்டும். அதை மற்றவர்கள் கண்டு பரம பிதாவை மகிமைப் படுத்த வேண்டும். இப்படியாக தேவனுடைய தீபமாக உல கிலே மற்றய மனிதர்கள் மத்தியிலே சுடர்விடுங்கள்.

ஜெபம்:

உம்முடைய குமாரனாகிய இயேசுவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு என்னை முன்குறித்த தேவனே, எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருடைய சாயலிலே நான் தினமும் வளரும்படிக்கு என்னை வழிந டத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:29