புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 07, 2022)

இதய நிறைவோடுள்ள துதி

1 சாமுவேல் 16:7

மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதத்தைப் பார்க்கிறார் என்றார்.


துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்று தாவீது சொல்லி, அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான். (1 நாளாகமம் 23:5-6) இப்படியாக அநேக வாத்தியக்கருவிகள் இசைப்பவர்களோடு, ஆயிரக்கணக்கானோர், தான் நேசிக்கும் தேவனாகிய கர்த்தரை துதிக்க வேண்டும் என்ற வாஞ்சை அவனுடைய உள்ளத்திலே இருந்தது. கர்த் தர் எண்ணிக்கையில் பிரியப்படுகின்றவர் அல்லர் என்பது தாவீது ராஜாவிற்கு தெரியும். தேவனாகிய கர்த்தர்தாமே, தாவீதின் மனந்திரும் புகின்றதும், தாழ்மையுள்ளதுமான இருதயத்தை அறிந்திருந்தார். அவன் தேவனுக்கு விரோதமாக குற்றம் செய்த போதும், சாட்டுப் போக்கு எதையும் சொல்லாமலும், தன்னை நியாயப்படுத்த முயலாமலும், தன் மீறுதல்களை ஏற்றுக் கொண்டு தேவனுடைய பாதத்திலே சரணடையும் இருதயமுள்ளவனாக இருந்தான். அவன் பட்டணத்திலே ராஜாவாக இருக்கும் போது, ஆயிரக்கணக்கானோருடன் சேர்ந்து தேவனை ஆராதித்தான். வனாந்திரத்திலேயும், கெபிகளிலும், மலைகளிலும், குகைகளிலும் தனித்திருக்கின்ற வேளையிலும், அங்கிருந்து தேவனை துதித்து வந்தான். தேவன் அவனுடைய சத்தத்தை கேட்டார். பிரியமான சகோதர சகோதரிகளே, ஒரு வேளை நீங்கள் ஆயிரமாயிரம் ஜனங்கள் மத்தியிலே தேவனை ஆராதனை செய்து வரலாம் அல்லது ஒரு சில விசுவாசிகளோடு தேவனை ஆராதனை செய்யலாம் ஆனால் ஒன்றை மாத்திரம் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். அழிந்து போகின்ற உலக பொருட்களினால் நாம் தேவனை கவர்ந்து கொள்ள முடியாது. அழியாமையை தரிக்கக்கூடிய நம்முடைய ஆத்துமா தேவனை எப்போதும் வாஞ்சிக்க வேண்டும். அப்படியாக, தேவனை தன் வாழ்வில் முதலிடமாகவும், புகலிடமாகவும் வைத்திருக்கும் ஆத்துமா, எங்கே இருந்தாலும், தேவன் அங்கே இருப்பார். ஒருவேளை நீங்கள் வாத்தியக் கருவிகளை வாசிக்கின்றவர்களாக இருந்தால், முதலாவதாக உங் கள் இருதயத்தை தேவனிடம் கொடுத்து, இதயபூர்வமாக தேவ கானங் களை பாடி, வாத்தியத்தை நேர்த்தியாய் இசையுங்கள். மனந்திரும்பும் இருதயமுடையவர்களாக இருங்கள். உங்கள் இருதயத்தில் இருந்து வரும் துதி தேவனுக்கு இனிமையாக இருக்கும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்தறிகின்ற தேவனே, என்னுடைய எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் உம்முடைய வார்த்தையின் வழியில் இருக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நாளாகமம் 23:1-6