புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 17, 2022)

விண்ணோர் கீதங்கள்

வெளிப்படுத்தல் 5:10

எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்க ளும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.


பாடல்கள், இசை, இராகம், தாளம் என்னும் பதங்கள் பொதுவாக இந்த உலகிலே மனிதர்களின் வாழ்விலே பின்னிப் பிணைந்திருக்கின்றது. திரையிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், தத்துவ பாடல்கள், போராட்டப் பாடல்கள் என்று பலதரப்பட்ட பாடல்களை மனிதர்கள், பல வகையான மெட்டுக்களோடு பாடுகின்றார்கள். அந்தப் பாடல்களில் சில மிகவும் கவனமாக எழுதப்பட்வைகளும், தரமான கருத்துக்களை உடையதாகவும் இருக்கின்றது. அவைகளினாலே முற்றிலும் பிரயோஜனம் இல்லை என்று கூறிவிட முடியாது. எடுத்துக் காட்டாக, குழந்தைகளை தூங்க வைப்பதற்காக பல தாலா ட்டுப் பாடல்களை தாய், தந்தையர்கள் பாடுவதுண்டு. தேசப்பற்றுள்ளோர், தங்கள் தேசபிமானத்தைக் காண்பிக்கும்படி தேசிய கீதத்தை பாடுகின்றார்கள். இப்ப டியாக மனம் கவலையில் இருக்கும் போதும், மகிழ்ச்சியாக இருக்கும் போதும் மனிதர்கள் பலவிதமான பாடல்களைக் கேட்கின்றார்கள். வேறுசிலரோ அவைகளை பாடுகின்றார்கள். அவைகள் மனிதர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதாகவும், சுய அனுதாபத்திற்கும், களியாட்டங்களுக்கும், அவரவர் வாழ்க்கை கொள்கைகள், தத்துவங்களுக்கும், ஏற்புடையதாகவும் இருக்கின்றது. சில மனிதர்கள் சந்தோஷத்திற்கும், துக்கத்திற்கும், வாதுக்கும், கைகலப்பிற்கும் மதுபானத்தை அருந்துகின்றார்கள். அதனால் அவர்களுக்கு தற்காலிகமான உணர்வுகள் உண்டாகின்றது. வெறி கலைந்துபோன பின்பு, அந்த உணர்வுகளும் போய்விடுவது போல, உலக பாடல்களினால் உண்டாகும் உணர்வுகள் யாவும் அதி சீக்கிரமாய் மறைந்து போய் விடும். இருந்தவரும், இருக்கின்றவரும், இனிமேலும் வருகின்றவருமாயிருக்கின்ற தேவாதி தேவனின் தன்மைகளை துதித்துப் போற்றும் தெய்வீக கானங்கள் என்றென்றைக்கும் அழியாத விண்ணோரின் கீதங்களாயுள்ளது. ஆத்துமாவை தேற்றும் சத்திய வேதவார்த்தைகளைக் கொண்ட ஆன்மீக கானங்கள். நித்திய ஜீவனை நமக்கு கொடு க்கிறது. நம் ஆண்டவராகிய இயேசுவை குறித்து பாடும் நித்திய கானங்கள். நாம் அக்கரையாகிய பரலோகத்திற்குச் சென்ற பின்னரும் தேவ ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவை துதித்துப் போற்றும் விண்ணோரின் கீதங்களைப் அங்கு பாடுவோம். எனவே பரிசுத்தரைப் போற்றிப் பாடும் பாடல்களே உங்கள் நாவில் எப்போதும் இருப்பதாக.

ஜெபம்:

உம்மைத் துதிக்கும் புதியபாட்டை என் நாவில் தந்த தேவனே, நித்தியமானவைகளை நான் பற்றிக் கொண்டிருக்கவும், விண்ணோர் கீத ங்களினால் என் சிந்தையானது எப்போதும் நிறைந்திருக்க வேண்டும்படி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 40:3