புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 08, 2022)

நம்முடைய மேன்மை எது?

1 கொரிந்தியர் 1:30

எழுதியிருக்கிறபடி, மேன் மைபாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டத்தக்கதாக,


ஒரு ஐசுவரியவானானவன் தன் வாழ்நாட்களிலே பற்பல கலைகளை கற்று, இந்த உலகிலே பல தேசங்களுக்கு சென்று, கேந்திர முக்கியத்தும் வாய்ந்து இடங்களை தரிசித்து, அவ்விடங்களிலுள் பிரசித்தி பெற்ற பொருட்களை வாங்கி, அவைகளால் தன் வீட்டை அலங்கரித்து வந்தான். கண்காட்சிகூடம் போல அவனுடைய வீட்டிலுள்ள பொருட்கள் பார்வைக்கு மிகவும் அழகாகவும், வீட்டிற்கு வரும் விருந் தாளிகளுடன் பேசுவதுக்கு பெருமையையும் கொடுத்தது. இந்த உலகத்தினுடைய கலைகளாலும், கிடைப்பதற்கரிதான பொருட்களாலும் அவன் அவன் உள்ளமும் இல்லமும் நிறைவாகவே நிறைந்திருந்தது. அவைகள் அவனுடைய பொக்கிஷமாக இருந்தது. இவைகளினாலே இந்த உலகிலே பிரயோஜனம் ஏதும் இல்லை என்று கூறமுடியாது. இந்த உலகிலே இவைகளினாலே மனிதர்களுக்கு பெயரும் புகழும் உண்டாகலாம். இப்படியாக மனிதர்கள் தங்கள் ஜாதி, மத, குல, அந்தஸ்துக ளையும், கல்வி, உடமைகளையும், தங்கள் பிள்ளைகளையும் குறித்து மேன்மை பாராட்டு கின்றார்கள். அந்த ஐசுவரியவான் தான் கற்றுக் கொண்ட கலைகளின்; அறிவைமையமாக வைத்து, தன்னிடமிருக்கும் மேன்மை என்ன என்பதை இடைபோட்டுக்கொண்டான். ஆனால், இந்த பொக்கிஷங்களினாலே அவன் ஆத்துமாவிற்கு உண்டாகும் மேன்மை என்ன என்பதைக் குறித்து சிந்திக்காதபடிக்கு அவனுடைய மனக்கண்கள் குருட்டாடத்திலே இருந்தது. ஏனெனில் உலக அறிவினாலே, தேவனை அறிகின்ற அறிவை பெற்றுக் கொள்ள முடியாது. ஒரு மனிதனானவன், அழிந்து போகின்ற இந்த உலக கலைகளினாலும், பொக்கிஷங்களினாலும் மேன்மையடைவதால் அவன் ஒருபோதும் அழியாமையை சுதந்தரித் துக் கொள்ள முடியாது. நாம் ஒவ்வொருவரும், அறிந்தோ அறியாமலோ நம்மிடத்திலுள்ள சிறப்பானவைகளையும், உச்சிதமானவைகளை யும் குறித்து மேன்மை பாராட்டுகின்றோம். சில வேளைகளிலே தேவ பிள்ளைகளாகிய நாம் கூட நம்மிடம் இருக்கும் அதிமேன்மையானது என்ன என்பதை மறந்து போய் விடுகின்றோம். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பதே நம்முடைய மேன்மை. அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். அவருடைய சிலுவை மரணத்தின் வழியாக பாவமன்னிப்பை பெற்றோம். இது தேவனுடைய கிருபை எனவே நாம் நம்முடைய கர்த்தரையும், தேவ கிருபையையும் சிலுவை யையும் குறித்தே மேன்மை பாராட்டுவோமாக.

ஜெபம்:

உன்னதமான தேவனே, கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளை கண்டடையும் பாக்கிய த்தை பெற்ற நான், அவைகளையே நாடித் தேட உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:14