புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 04, 2022)

இடைவழியிலே என்ன செய்வோம்?

1 தெச 5:6

விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.


ஒரு மனிதனானவன் வேலையலுவலாக வருடந்தோறும், தன் குடும்பத்தோடு புறதேசங்களுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. அவர்களு டைய பயணநிரலின்படி (itinerary), இடை வழியிலே (Transit) இன்னுமொரு விமான நிலையத்திலே பல மணித்தியாலங்கள் தரித்து நிற்க வேண்டியதாக இருந்தது. இடை வழியிலே தரித்து நிற்பது, இளைப்பும் சலிப்புமாக இருந்தது. பிள்ளைகளும் பொறுமையற்றவர்களாக தொந்தரவு செய்து கொண்டிருந்ததால், வெளியே சென்று அந்த நாட்டை பார்த்து வருவோம் என்று தீர்மானம் செய்தார்கள். அவர்கள் மறுபடியும் அந்த விமான நிலையத்திற்கு முன்குறிப்பிட்ட நேரத்திற்கு வரும்படியாக எச்சரிக்கப்பட்டிருந்தார்கள். அதற்கிணங்க அவர்களும் குறித்த நேரத்திற்கு அங்கே திரும்பி வரும்படியாக வெளியே சென்றார்கள். இந்த குறுகிற சுற்றுலா யாவருக்கும் நன்மையாகவும் பரபரப்பாகவும் இருந்து வந்தது. இப்படியாகவே ஒரு முறை அவர்கள், ஒரு முக்கியமான பயணம் பண்ணும் போது, வழக்கப்படி இடைவழியிலே குறும் சுற்றுலாவிற்கு நாட்டை பார்க்க வெளியே சென்று மறுபடியும் திரும்பும் போது, நெடுஞ்சாலை யிலே ஏற்பட்ட பாரிய விபத்தொன்றினால், வாகனங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. அவர்கள் நினைத்த நேரத்திற்கு அவர்களால் விமான நிலையத்திற்கு திரும்பமுடியவில்லை. அவசரவசரமாக, வேறு வழியாக விமான நிலையத்திற்கு விரைந்து சென்றார்கள். ஆனால், அங்கே சென்றபோது, அவர்களுடைய விமானமானது, முன்கு றித்த நேரத்தில் விமான நிலையத்தைவிட்டு புறப்பட்டுவிட்டது என்று அறிந்து கலமடைந்தார்கள். இந்த சம்பவத்திற்கு ஒத்ததாகவே நாமும், நம்முடைய பரலோக பயணத்திற்காக, இந்த உலகமாகிய இடை வழி யிலே தரித்திருக்கின்றோம். தரித்திருக்கும் காலத்திலே, நம் எண்ணங்களுக்கு நன்மையாக தோன்றுகின்ற அத்தியவசியமற்ற காரியங்களிலே ஈடுபடுகின்றோம். ஆனால், நம்முடைய ஆண்டவராகிய இயேசு, நம்மை அழைத்துச் செல்ல அவருடைய வேளையிலே வருவார். அந்த வேளையிலே நாம் ஆயத்தமுள்ளவர்களாக தரித்திருக்கும்படி எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த உலக பயணங்களை தவற விட்டால், ஒரு வேளை, சட்டதிட்ட ஒழுங்கு முறைகளின்படி, தாமதமாகி மாற்று வழிகளிலேகூட செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம். ஆனால் கர்த்தருடைய வேளையிலே ஆயத்தமற்றவர்களாக இருப்பவர்களை பார்த்து அவர்: உங்களை அறியேன் என்று கூறுவார். எனவே எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

வார்த்தையில் உண்மையுள்ள தேவனே, ஆண்டவர் இயேசு வரும் நாளையாவது நாழிகையையாவது நான் அறியாதிருக்கிறபடியால் எப்போதும் விழிப்புள்ளவனாக தரித்திருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:1-13