புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 31, 2022)

அறிவுக்கெட்டாத கிருபை

சங்கீதம் 103:11

பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோஇ அவ ருக்குப் பயப்படுகிறவர்கள் மேல் அவருடைய கிருபை யும் அவ்வளவு பெரிதாயிரு க்கிறது.


ஆகாய மண்டலத்திலே நம்முடைய கண்களுக்கு தெரியும் பெரிய சுடர்களாகிய சந்திரன், சூரியன், மற்றும் நட்சத்திரங்கள் மனிதனுடைய அளவு கோலின்படி, பூமியிலிருந்து சுமார் எவ்வளவு தூரத்திலே உள்ளது என்று இன்று விஞ்ஞானிகள் கணிப்பிட்டு கூறுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, சூரியனானது, பூமியிலிருந்து சுமார் 150 மில்லியன் கிலோ மீற்றர் தூரத்திலிருக்கின்றது என்று கூறுகின்றார்கள். ஆகாயவிமானங்கள் முகில் கூட்டங்களுக்கூடாகவும், மேக மண்டலங்களுக்கு மேலாகவும் பறந்து செல்கின்றது. அவைகள் செல்லும் உயரங்களை மனிதர்கள் அளவிடுகின்றார்கள். அவற்றிற்கு மேலாக செயற்கை கோள்களை அனுப்பி வைக்கின்றார்கள். அவற்றிற்கு மேலாக நட்சத்திர மண்டலம் இருக்கின்றது என கூறுகின்றார்கள். இப்படியாக, நம் கண்களுக்கு தெரியாத சூரிய தொகுதியிலிருக்கும் கிரகங்களின் தூரங்களையும் கணிப்பிட்டு சொல்கின்றார்கள். ஆனால், அவை எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும் வானம், பூமியிலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கின்றது என்பதை எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அந்த வானத்தை யாராலும் தொட முடியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள். அது மனிதனுடைய அறிவுக்கு அப்பாற்பட்டது. அதற்கு அளவு இல்லை. முடிவு இல்லை. மனிதனால் கிரகிக்க முடியாத தூரம். ஆம் பிரியமானவர்களே, பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. இந்த ஆண்டடிலே கடந்து வந்த மாதங்களை திரும்பிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் கடந்து வந்த ஆண்டுகளை நினைத்துப் பாருங்கள். வந்த பாதையை திரும்பிப் பாருங்கள். இரட்சிப்பின் பாக்கிய நாளை எண்ணிப் பாருங்கள். ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, தேவனாகிய கர்த்தர் உங்களை சுமந்து வந்த நாட்களை சிந்தித்துப் பாருங்கள். சோர்ந்து போன வேளைகளிலும், விழுந்து போன நேரங்களிலும் நமக்கு பெலன் தந்து, சத்துவத்தை பெருகப் பண்ணின ஆண்டுகளை தியானித்துப் பாருங்கள். நாம் தேவாதி தேவனை அறிந்த நாட்களிலும், அறியாத நாட்களிலும், அவரை விட்டு தூரம் சென்ற நாட்களிலும், தம்முடைய மாறாத கிருபையினாலே அவர் நம்மை அணைத்துக் கொண்டார்.

ஜெபம்:

மனதுருகின்ற தேவனாகிய கர்த்தாவே, என்னுடைய அறிவுக்கு எட்டாத கிருபையை என்மேல் பொழிந்து என்னை தினமும் உம்முடைய சாயிலிலே வளர்ந்து பெருகும்படி என்னை நடத்திச் செல்வதற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 54:10