புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 30, 2022)

இது கடினமான உபதேசமா?

மத்தேயு 19:26

மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.


ஒரு சமயம், ஆண்டவராகிய இயேசு வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின் சென்றார்கள். அந்த இடத்திலே, ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பலுகிப் பெருகச் செய்து, அவருக்கு பின்சென்ற திரளான ஜனங்களை திருப்தியாய் போஷித்தார். இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். அதுமட்டுமல்லாமல், ஆண்டவர் இயேசுவை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொ ண்டுபோக மனதாயுமிருந்தார்கள். தம்மைப் பின்பற்றி வந்த ஜனங்களின் உண்மையான மனநிலையை குறித்து அறிந்திருந்த ஆண்டவர் இயேசு, அவர்களுக்கு தாம் வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினார். அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை நான் உங்களுக்கு தருவேன் என்று வாக்குரைத்தார். ஜனங்களோ, தங்கள் மனநிலையை மாற்ற மனதில்லாதவர்களாய் ஆண்டவர் இயேசுவோடு வாக்குவாதம் செய்தார்கள். தங்கள் வயிற்றுப் பசியை ஆற்ற அவருக்கு பின்னாக சென்றவர்களில் அநேகர் இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். வேறு சிலர் முறுமுறுத்தார்கள். இன்னும் சிலர் இடறலடைந்தார்கள். பின்னர் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவ ரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். பிரதான சீஷனாகிய சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசுவிடமிருந்து எதை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் என்று உங்கள் இருதயத்தை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். இன்றைய நாளிலும், இரட்சிப்பின் உபதேசமானது கடின மான உபதேசம், இதை யார்தான் கேட்பார்கள் என்று கலகங்களை உண்டாக்கி, இடறல்களை உருவாக்கி, அநேகர் பின்வாங்கிப் போகலாம். ஆனால், நீங்களோ இவைகளை கண்டு மனம் தளர்ந்து போய்விடாதிருங்கள். தேவனால் எல்லாம் கூடும்.

ஜெபம்:

பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல உம்முடைய ஆவியினாலே ஆகும் என்று சொன்ன தேவனே, உம்முடைய தூய ஆவியானவர் என் னோடிருந்து என்னை வழிடத்திச் செல்வதற்காக உமக்கு நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 6:60-63