புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 28, 2022)

எப்போதும் விழிப்புள்ளவர்களாயிருங்கள்

1 கொரி 16:13

விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.


ஒரு தேசத்தின் அதிபதியானவர், தன் தேசத்திலே சட்டவிரோதமாக குடியேறியிருந்த யாவருக்கும் பொது மன்னிப்பை வழங்கி, அவர்களுக்கு தேசத்தின் குடியுரிமையை வழங்குவதற்கு தீர்மானம் செய்திருந்தார். அந்தப்படி, அவர்கள் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்குரிய கால அவகாசத்தையும் அவர்களுக்கு வழங்கியிருந்தார். இப்படிப்பட்ட சிலாக்கியத்தை நாம் தவறவிடவே கூடாது என்று சிலர் சென்று தங்கள் பெயர்களை பதிவு செய்து, குறித்த காலத்திலே குடியுரிமையை பெற்றுக் கொண்டார்கள். ஆனால் வேறு சிலரோ, தங்கள் இருதயங்களை கடினப்படுத்திக் கொண்டு அந்த அதிபதியின் வார்த்தைகளை அற்பமாக எண்ணி, யாருக்கு இந்த குடியுரிமை தேவை என்று அசட்டை செய்து, தங்களது வழிகளிலே நடந்து வந்தார்கள். இதற்கொத்ததாகவே, நம்முடைய பிதாவாகிய தேவனும், ஒருவரும் கெட்டுப் போகாமல், நித்திய வாழ்வை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தம்முடைய குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அவர்கள் அடையும் ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. முற்காலத்திலே, லோத் என்னும் மனிதனுடைய நாட்களிலும்கூட ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். தேவ நீதியைக் குறித்த எந்த சிந்தையும் இல்லாதவர்களாய் துன்மார்க்கத்திலே வாழ்ந்து வந்தார்கள். அதுமட்டுமல்லாமலும், அங்கிருந்த ஜன ங்கள் சோதோம் பட்டணத்திற்கு வந்த இரண்டு தேவ தூதர்களுக்கு அக்கிரமமும் அநியாயமும் செய்ய வேண்டும் என்று திட்டம் பண்ணி, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, அந்த தூதர்கள் இருந்த இடத்தை சூழ்ந்து கொண்டார்கள். லோத்தின் நாட்களில் நடந்தது போலவும் மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷpத்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. பிரியமானவர்களே இந்த உலகத்திலே நடப்பகைவளைப் பார்த்து ஆரம்பத்தில் கொண்ட விசுவாசத்தை தளரவிடாமல், இயேசுவை நோக்கி முன்னேறுங்கள்.

ஜெபம்:

வார்த்தையை அனுப்பி எம்மை குணமாக்கும் தேவனே, எப்போதும் உம்முடைய சத்தம் இன்னதென்று நான் உணர்ந்தறியத்தக்கதாக, விழிப்புள்ளவனாக இருக்கும்படிக்கு தூய ஆவியினாலே என்னை நடத் திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 17:28-30

Category Tags: