புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 24, 2022)

முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்

கலாத்தியர் 5:16

ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறை வேற்றாதிருப்பீர்கள்..


அந்த மனிதனானவனின் தொல்லைக்;கு எல்லையில்லை. இது ஓயாத ஒழுக்காக இருக்கின்றது. இவன் எல்லோரோடும் கடித்துப் பட்சித்து, இப்போது என்னுடைய குடும்பத்தை பட்சிக்க எண்ணங்; கொண்டான். நான் யார் என்பதை அவனுக்கு சீக்கிரம் காட்டுகின்றேன். இந்த தொடர்கதைக்கு நான் ஒரு முடிவைக் காண்பேன். அந்த மனிதனானவனுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண் டும் என்று ஒரு விசுவாசியானவன் கூறிக் கொண்டான். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அவனுடைய, வயதான தந்தையானவர், அவனை அழைத்து, மகனே நான் சொல்வதைக் கேள். மனம் பதறி வார்த்தைகளைக் கொட்டாதே, உன்னுடைய வார்த்தைகளே உன்னை உன் வயோதிப நாட்களிலும் ஓய்வில்லாமல் தொந்தரவு செய்யும். நீ அந்த மனிதனானவனுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி உம் மாம்சத்திலே கிரியைகளை நடப்பிக்கும் போது, அவனுக்கல்ல, உன் ஆவிக்குரிய மனுஷனுக்கே நீ முற்றுப்புள்ளி வைக்கின்றாய். நீ முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய ஒரு மனுஷன் இருக்கின்றான். அவன் உனக்குள்ளளேயே இருக்கின்றான். அவனுக்கு நீ அவ்வப்போது உயிர் மீட்சி கொடுத்து வருகின்றாய். நீ விட்டுவிட்ட உன் மாம்ச சுபாவத்திற்குரிய பழைய மனுஷனுக்கே முற்றுப் புள்ளியை இன்று வைபாயாக என்று அவனுக்கு தயவாய் ஆலோசனை கூறினார். ஆம், பிரியமானவர்களே, தன்னை கிறிஸ்துவோடு சேர்க்காதவன் தன் வாழ்க்கையை தானே சிதறடிக்கின்றான். நாம் கிறிஸ்துவோடு இசைந்திருப்பதால், நாம் அல்ல கிறிஸ்துவே நமக்குள் ஜீவிக்கின்றார். மோசம் போக்கும் நம்முடைய பழைய மனுஷன் கிறிஸ்துவோடே சிலுவையில் அறையப்பட்டாயிற்று என்று அறிந்திருக்கிறோம். நாம் மறுபடியும் பழைய மனுஷனை உயிர்பிக்கும் போது, நாம் நம்மை கிறிஸ்துவோடு சேர்க் காமல், நம் வாழ்வை சிதறடிக்கின்றவர்களாகவே இருப்போம். சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது. தன் உதடுகளை அடக்கு கிறவனோ புத்திமான் (நீதி 10:19) என்று நீதிமொழிகளின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். நாம் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்து, அழிந்து போகாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவராக இருக்க வேண்டும். நீங்கள் யாருக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகின்றீர்கள்? மோசம் போக்கும் பழைய மனுஷனுக்கா அல்லது நித்திய வாழ்வு தரும் ஆவிக்குரிய மனுஷனுக்கா?

ஜெபம்:

பரிசுத்தத்திற்கென்று அழைத்த தேவனே, நான் என்னுடைய அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உம்முடைய சித்தத்திற்கென்று நீதியின் ஆயுதங்களாக ஒப்புக் கொடுக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 6:12