புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 20, 2022)

எல்லார்மேலும் தயவுள்ளவர்களாக...

சங்கீதம் 145:9

கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்;


ஒரு ஊரிலுள்ள இரண்டு வாலிபர்கள் நண்பர்களாக இருந்தார்கள். தங்களுக்கு கிடைக்கும் நேரங்களை விரயப்படுத்துவதும், மாலை வேளைகளிலே ஊர் சுற்றித்திரிவதும் அவர்களுடைய வாழ்க்கையிலே பெருகிக் கொண்டிருந்தது. இதினிமித்தம், உயர்தர வகுப்பிலே படிக்கும் அவர்கள் தங்கள் பாடங்களிலே பின்னடைவைக் கண்டார்கள். அந்த நண்பர்களில் ஒருவனுடைய வீட்டார் ஐசு வரியமுள்ளவர்களும், அதிகாரிகள் மத்தியிலே செல்வாக்குள்ளவர்களுமாய் இருந்தார்கள். மற்றவனுடைய வீட்டாரே எளிமையான வாழ்க்கை தரத்தையுடைய சாதாரண குடிமக்களாக இருந்தார்கள். இந்த வாலிபர்களின் நிலைமையை கண்ட பாடசாலையின் வகுப்பு ஆசிரியரானவர் அந்த இரண்டு வாலிபர்களின் பெற்றோர்களையும் அழைத்து அவர்களோடு பேசினார். அந்தப் பெற்றோர்கள் வேறுபட்ட சமூக அந்தஸ்துள்ளவர்களாயிருந்த போதும், அந்த ஆசிரியரானவர், அவர்களுக்கு முகதாட்சண்யம் பண்ணாமல், இரண்டு மாணவர்களுடைய உண்மையான நிலையை விபரித்துக் கூறினார். இருவரும் முதலாம் தவணையிலே இருக்கின்றார்கள் ஆனால் இவர்கள் இப்படியாக தங்கள் பாடங்களை குறித்து அலட்சியம் செய்து கொண்டேபோனால், இவர்கள் இந்த ஆண்டிலே சித்தி பெறமாட்டார்கள் என்று திட்டமாக அந்த ஆசிரியர் கூறினார். அதுமட்டுமல்லாமல், இவர்கள் இரு வரும்படிப்பிலே ஆர்வத்தை செலுத்தினால், இவர்களுக்கு உதவுவதற்கும், இவர்கள் தவறிய பாடங்களை மறுபடியும் சொல்லிக் கொடுப்பதற்கும் நான் தயாராக உள்ளேன் என்றும் அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டினார். பிரியமானவர்களே, நம்முடைய அருள் நாதர் இயேசுவும், இவ்வண்ணமாகவே எப்போதும் நம்முடைய உண்மை நிலைமையை நமக்கு தெரியப்படுத்துகின்றார். நாம் உணர்வற்றவர்களாக, மனதை கடினப்படுத்துகின்ற வேளைகளிலும், சில காரியங்களை நம்முடைய வாழ்க்கையிலே அனுமதித்து, அவைகள் வழியாக நம்மை கண்விழி க்கச் செய்கின்றார். அது மட்டுமல்லாமல், நாம் அகப்பட்டிருக்கும் கண்ணிகளிலிருந்து தப்பித்துப் கொள்ளும் வழியை காண்பித்து, செம்மையான வழியிலே நல்ல மேய்ப்பனைப் போல நம்மை பாதுகாத்து நடத்து வதற்கு எப்போதும் சித்தமுள்ளவராகவே இருக்கின்றார். அவரைப் போலவே நாமும் மற்றவர்களுடைய உண்மையை நிலைமையை கூறி, அவர்களை நல்வழிப்படுத்துகின்ற சிந்தையுள்ளவர்க ளாகவும், வழிகாட்டிகளாவும் மாற வேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள் தேவனே, நான் மற்றவர்களுடைய குற்றங்களை கண்டுபிடிக்கின்றவனாக அல்ல, குற்றங்களிலே அகப்பட்டிருக்கின்றவர்களை விடுதலையாக்கின்றவனாக மாற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:11