தியானம் (ஐப்பசி 13, 2022)
கிறிஸ்துவை தரித்தவர்கள்
1 கொரிந்தியர் 12:27
நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
ஒரு ஊரிலே இருந்த சனசமூகத்தைச் சார்ந்த அங்கத்தவர்கள் தங்கள் ஊரில் வாழும் ஜனங்கள் நன்மையடையும்படியான பல்வேறு திட்டங்களை செய்து வந்தார்கள். அந்த ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன் அந்த சனசமூக நிலையத்திலே அங்கத்தவராவதற்குரிய முன்தக மைகள் என்ன என்று ஆராய்ந்து அறிந்து, அந்த சனசமூக நிலையத் திலே அங்கத்தவனாக தன்னை இணைத்து கொண்டான். அந்த நிலையத் தின் ஒழுங்கு முறை ப்படி, அங்கத்துவத்தை பேணி ப்பாதுகாப்பதற்கு, மாதாந்தம் தான் கொடுக்க வேண்டிய சந்தாவை தவறாமல் கொடுத்து, வருடாந்தம் குறைந்த பட்சம் அவன் பங்குபற்ற வேண்டிய முக்கிய கூட்டங்களிலே கலந்து கொள்வான். இந்த நிலமையானது, இந்த உலகத் திற்குரிய கழகம். அங்கே சில நன்மைகள் உண்டாயிருந்தது. ஆனால், கிறிஸ்தவம் என்பது ஒரு கழகம் அல்ல. அது ஒரு நிலயமுமல்ல. இந்த உலத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கும் ஸ்தாபனமும் அல்ல. ஒருவன் இன்ன பிரகாரமாக சட்ட ஒழுங்கு முறைகளை கடைப்பிடித்து, சடங்குகளை நிறைவேற்றுவதால் ஒருவன் சத்தியவேதம் கூறும் கிறிஸ்துவையுடையவனாக (கிறிஸ்தவனாக) இருந்து விட முடியாது. நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். அதாவது, கல்வி, வேலை, திருமணங்கள், கொண்டாட்டங்கள், பயணங்கள், நட்புகள், உறவுகள் மற்றும் பொழுது போக்குகள் உட்பட வாழ்வின் எல்லாக் கிரியைகளையும் நம்முடைய இஷ்டப்படி நடத்தி வந்தோம். இரக்கத்தில் ஐசுவரியமுள்ள நம் தேவன், தம்முடைய மிகுந்த அன்பினாலே, பழைய வாழ்க்கையின் முறைமையிலிருந்து நம்மை விலக்கி மீட்டுக் கொண்டார். கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தின் அவயவங்களாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றோம். தேவ கிருபையினாலே விசுவா சத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டோம். பாக்கியம் பெற்ற சந்ததியாக வேறு பிரிக்கப்பட்டோம். இது மனிதர்களுடைய சடங்குகளாலும், ஒழுங்கு முறைகளினாலும் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. எனவே, மறுபடியும் பழைய வாழ்க்கை முறைகளுக்கு உங்கள் சந்ததியை திருப்பிக்கொள்ளாமல், கிறிஸ்துவின் அவயவங்களாக, கிறிஸ்துவை தரித்தவர்களாக, அவருடைய திவ்விய சுபாவங்களிலே வளர்ந்து பெருகி, நாளுக்கு நாள் மறுரூப மாக்கப்படுவோமாக.
ஜெபம்:
பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு என்னை வேறு பிரித்த தேவனே, மறுபடியும் நான் என்னுடைய இஷ்டப்படி வாழ்க்கையை நடத்தாமல், உமக்கு பிரியமான பிள்ளையாக வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபே 1:20-23