புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 06, 2022)

நாம் திறப்பின் வாசலில் நிற்பவர்கள்

1 தீமோத்தேயு 2:1

எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;


இன்றைய உலகிலே, ஆண்டவர் இயேசுவின் நாமத்திற்கு எதிராக வாழ்பவர்கள் தேசங்களிலே அநேகராக பெருகி வருகின்றார்கள். இவர்கள் அழிவை விரும்பி, தீமைகளை தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களோடு மற்றவர்களும் அழிந்து போகும்படிக்கு, மனிதர்களை இடறிப் போகப் பண்ணுகின்றார்கள். சில நாடுகளிலே அதிகாரங் களில் இருப்பவர்கள் கூட கிறிஸ்துவுக்கு விரோதமாக வெளியரங்கமாக செயற்பட்டு வருகின்றார்கள். திருட ன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் என்பதை அறியாமல், இவர்கள் திருடனாகிய பிசாசானவனின் வழிகளை அகலமாக திறந்து விடுகின்றார்கள். தேசங்களிலே அக்கிரமங்களை பெருகப்பண்ணுகின்றார்கள். இப்படியாக அநியாயங்கள் மலிந்திருக்கின்ற வேளைகளிலே, தேசங்களிலே அக்கிரமம் மிகுதியாவதினாலே அழிவுகள் உண்டாகின்றது. இப்படியான வேளையிலே, 'நான் முன்கூட்டியே சொன்னேன்' 'இந்த தேசத்திற்கு இப்படித்தான் நடக்க வேண்டும்' 'இது இவர்களின் இறுமாப்புக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்' என்று பல அழிவுக்குரிய வார்த்தைகளை சில தேவ பிள்ளைகள் கூட பேசிக் கொள்கின்றார்கள். தேவனாகிய கர்த்தருடைய தீர்க்கதரிசியானவன், தேவன் கூறிய காரியங்களை, அவர் கூறியபடி சொல்ல வேண்டும். (எசேக்கியேல் 33:7-9) ஆனால், தேவனால் அழைக்கப்பட்ட நாம் யாவருமே தேவனுடைய பிள்ளைகளாக இருக்கின்றோம். எனவே நாம் திறப்பின் வாசலிலே நின்று, தேசத்தின் சேமத்திற்காக கண்ணீரோடு ஜெபிக்க வேண்டும். யோனோ என்னும் பெயர் கொண்ட தீர்க்கதரிசியானவன், நினிவே என்றபட்டண த்தின் அழிவைக் குறித்து தேவனுடைய முன்னறிப்பை தெரிவித்தான். பின்பு, அவனுடைய இருதயமானது, அந்த தேசத்தார் அழிவிலிருந்;து தப்பித்துக் கொள்வதைவிட, தான் சொன்ன தீர்க்கதரினம் நிறைவேற வேண்டும் என்பதிலேயே ஆர்வமாக இருந்தான். நாம் அப்படி இருக்கலாகாது. அழிந்து போகின்ற ஆத்துமாக்களைக் குறித்த பாரம் நம் இருதயத்திலே பெருக வேண்டும். ஒருவரும் கெட்டுப்போகாமல் மனந்திரு ம்ப வேண்டும் என்று அன்புள்ள தேவனாகிய கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். எனவே நாம் அழிவுகளிலே சந்தோஷப்படாமல், மனிதர்கள் மீட்படைய வேண்டும் என்று வேண்டுதல் செய்வோமாக.

ஜெபம்:

மனதுருக்கமும் நீடிய பொறுமையுமுள்ள தேவனே, ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்கின்ற உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 13:6