புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 23, 2022)

உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்

ரோமர் 12:12

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.


ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். அவனிடத்தில் திரளான செல்வம் இருந்தது. ஒரே நாளிலே, அவனுக்கிருந்த செல்வங்கள் யாவும் ஒழிந்து போயிற்று. அவனுடைய பிள்ளைகளும் கூட மரித்துப் போனார்கள். பின்பு சாத்தானானவனோ, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் யோபுவை வாதித்தான். அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்ப லில் உட்கார்ந்தான். அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தம த்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவ னைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். ஏனெனில், அவளுடைய இருதயம் அவர்களிடம் இருந்த செல்வத்தில் இருந்தது. ஆனால் இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ் செய்யவில்லை. இன்றும், சில தேவபிள்ளைகள், தங்கள் வாழ்க்கையில் இக்கட்டும் நெரு க்கமும் சூழ்ந்து கொள்ளும் வேளைகளிலே தேவனை நம்பியிருந்தோமே என்று அவரை தங்கள் இருதயங்களிலே தூஷpக்கின்றார்கள். செய்யும் தொழிலிலே நஷ்டம் வரும்போதும், படிக்கும் பாடங்களிலே சித்தியடையாமற் போகும் போதும், நோய்கள் பற்றிக் கொள்ளும் போதும், யுத்தங்கள், பஞ்சங்களினால் உபத்திர வங்கள் சூழ்ந்து கொள்ளும் போதும், சபைகளிலே முரண்பாடுகள் ஏற்படும் போது, இப்படியாக வாழ்க்கையிலே ஏற்படும் மிகவும் சிறிதான பிரச்சனைகளிலும் தேவனோடு மனம் நொந்து கொண்டு, விசுவாசத்தைவிட்டு விலகிப்போன யோபுவின் மனைவியைப் போல வாழ்கின்றார்கள். சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். நீங்கள் எக்காலத்திலும், எவ்வேளையிலும் கர்த்தரை துதிக்காதபடிக்கு தடை செய்வதே பிசாசானவனுடைய தந்திரமாக இருக்கின்றது. எனவே, எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. தேவன் உங்கள் நிலைமையை நன்றாக அறிவார். அவர் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார்.

ஜெபம்:

ஆதியும் அந்தமுமான தேவனே, எந்தக்காலத்திலும் நான் உம்மைவிட்டு வழுவிப்போய்விடாதபடிக்கும், உம் நாமத்தை தூஷித்து பின்வாங்கிப் போகாதபடிக்கும் என் நடைகளை நீர் ஸ்திரப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:12