புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 03, 2022)

நம் கேடகமும் மாக பெரிய பெலனும்

ஆதியாகமம் 15:1

ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.


பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக ஆபிரகாம் என்ற ஒரு மனிதனானவனை தேவன்தாமே தம்முடைய சித்தத்தை இந்தப் பூமியிலே நிறைவேற்றுவதற்காக தெரிந்து கொண்டார். அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அவன் தேவனுடைய சிநேகிதனெ ன் னப்பட்டான். (யாக் 2:23). ஆபிரகாம் இந்தப் பூமியிலே உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். (ஆதி 25:7). அந்த 175 வருடங்களுக்கு பின்பு ஆபிரகாமுடைய கதை முடிந்து விட்டதா? இல்லை, இன்று நாம் ஆபிரகாமை விசுவாசத்த்தின் தந்ததை என்று கூறி அவரைப் பற்றி பேசுகின்றோம். சரித்திரத்திலே பல மனிதர்களைப் பற்றிப் பேசுவது போல நாம் இன்று ஆபிரகாமை பற்றி பேசுகின்றோமா? இல்லை, ஆபிரகாமுடைய பெயர் நித்திய நித்தியமாக நிலைத்திருக்கும்படி தேவன் ஆசீர்வாதத்தை கொடுத்தார். (லூக்கா 16:22-23) ஆபிரகாமை கர்த்தர் அழைத்த போது, அவனை நோக்கி: ஆபிராகாமே, நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். வானத்தையும் பூமியும் படைத்த தேவன் ஒரு மனிதனுக்கு கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கும் போது அவன் ஏன் கவலையடைய வேண்டும். ஆபிரகாமோ, தன் கேடகமும் பலனுமான கர்த்தரை சார்ந்து வாழ்ந்தான். அவன் நீதிமானின் ஆசிகளை பெற்றான். இந்தப் பூமியிலே நம்முடைய ஆயுசு நாட்களும் கூட முன் குறிக்கப்பட்டிருக்கின்றது. அந்த ஆயுசு நாட்களோடு நம்முடைய கதை பூமியிலே முடிந்து போகலாம். ஒருவேளை, ஆபிரகாமின் பெயரை போல நாம் பிரபல்யமானவர்களாக இல்லாதிருக்கலாம். ஆனால், தேவனுடைய கணக்கிலே, நம்முடைய கதை இந்தப் பூமியோடு முடிந்து போவதில்லை. நாம் இந்தப் பூமியிலே வாழ்வது நம்முடைய சரித்திர புத்தகத்திலே முதலாவது அத்தியாயமாக இருந்தால், நாம் இந்தப் பூமியைவிட்டு கடந்து செல்லும் போது, நித்திய நித்தியமாக இருக்கும் முடிவில்லாத இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமாகும். அந்த இரண்டாவது அத்தியாயம் பேரின்பமாக இருக்கு ம்படிக்கு, கிறிஸ்து வழியாக நாம் சுதந்தரித்துக் கொண்ட ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை பற்றிக் கொள்வோம். தேவனாகிய கர்த்தரே நமக்கு கேடகமும், மகா பெரிய பெலனுமாயிருக்கின்றார். அவரிலே சார்ந்து வாழும் போது, பூமியில் வாழும் நாட்களில் பிதாவாகிய தேவனின் சித்தத்தை நிறைவேற்றி, நித்திய பேரின்ப வாழ்விலே பங்கடையலாம்.

ஜெபம்:

என் பலனும் கேடகமுமான கர்த்தாவே, வானமும் பூமியும் ஒழிந்து போகும். நீரோ என்றென்றும் மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. நான் உம்மை சார்ந்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 102:25-28