புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 14, 2022)

இயேசுவே என் ஆதாரம்

யோவான் 15:5

இயேசு: என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது.


ஒரு மனிதனானவன், எதிர்பாராத விதமாக தெருவிலே ஏற்பட்ட பாரிய விபத்தொன்றிலே சிக்கிக் கொண்டதால், அவனை துரிதமாக மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றார்கள். அந்த மனிதனுடைய நிலைமையை ஆராய்ந்து பார்த்த வைத்தியர்கள், அவன் மரித்துக் போகாமல், அவன் உயிரை காத்துக் கொள்ளுப்படிக்கு, உடலில் அடிப்படை தொழிற்பாடுகளை செயற்கையாக இயங்க வைக்கும் வாழ்க்கை ஆதரவு அமைப்பில் (Life Support System) அவனை போட்டுக் கொண்டார்கள். அதன் பின்பு, அவனை குணமாக்கும்படிக்கு அவசியமான மருத்துவ சிகிச் சைகளை அவனுக்குச் செய்தார் கள். மருத்துவருக்கு ஞானத்தையும், நோயாளிகளுக்கு சுகத்தையும் கர்த்தரே அருளுகின்றார். மருத்துவராக இருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், எல்லா மனிதர்களுடைய நாடகளும் கர்த்ருடைய கரத்திலே இருக்கின்றது என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். அன்று அந்த மனிதனானவனுடைய சுவாசத் தொகுதி செயலிழந்து போயிருந்தால் அவன் மரித்தோர் தொகையிலே எண்ணப்பட்டிருப்பான். ஆனால் வாழ்க்கை ஆதரவு அமைப்பின் வழி யாக இந்தப் பூமியிலே அவன் நாட்களோ அவனுக்கு கூட்டிக் கொடுக்கப்பட்டது. மேற்கூறிய சம்பவத்தை ஒப்பனையாக வைத்துக் கொண்டு, நாம் இன்று நித்திய வாழ்வின் ஆதாரத்தை பற்றித் தியானம் செய்வோம். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். அதாவது, ஆண்டவராகிய இயேசுவே நம்முடைய வாழ்வின் ஆதாரமாக இருக்கின்றார். அவரையன்றி வேறே ஆதாரம் இல்லை (யோவான் 14:6). இயேசுவோடு இணைக்கப்படாதவன் இந்த உலகிலே உயிரோடே வாழ்ந்தாலும், அவன் ஆவிக்குரிய வாழ்விலே மரித்தவனாகவே இருக்கின்றான். நித்திய மரணத்திற்கு பங்காளியாக தன்னை ஒப்புக் கொடுக்கின்றவனாகின்றான். ஒருவன் இயேசுவிலே நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்;. இறுதியிலே அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். எனவே தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையானது எப்படி தாயோடு இணைந்திருக்கின்றதோ, அதுபோலவே நாம் நம்முடைய ஆதாரமாகிய இயேசுவோடு எப்போதும் இணைக்கப்பட்டவர்களாக வாழ்வோமாக.

ஜெபம்:

ஜெபம்: என் வாழ்வின் ஆதாரமாகிய தேவனே, உம் வார்த்தையிலே நான் நிலைத்திருந்து கனிகொடுக்கும் வாழ்க்கை வாழும்படிக்கு நீர் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 12:30