புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 03, 2022)

கிறிஸ்துவின் உபதேசத்திற்கு செவிசாயுங்கள்

யோவான் 8:43

என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?


'நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்' என்று தேவனாகிய கர்த்தர் தாமே ஆபிரகாமை ஆசீர்வதித்தார். இதனால், ஆபிகாரமுடைய சந்ததியிலே வந்தவர்கள், தங் களை ஆபிரகாமின் பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்வதை மேன்மையாக எண்ணினார்கள். கர்த்தராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, ஆபிரகாமின் வழி வந்த, மதத்தலைவர்கள் பலர், கர்த்தருடைய வார்த்தையை கேட்க மனதில்லாதவர்களாய், அவர்கள் தங்களிற்கு ஆபிரகாமே எங்கள் பிதா என்று கூறினார்கள். அதாவது, ஆபிரகாம், கர்த்தருக்கு பய ந்து அவர் வழியிலே வாழ்ந்ததால், அவருக்கு மேன்மையான ஆசீர்வா தங்கள் உண்டாயின. அது மட்டுமல்லாமல், ஆபிரகாமின் நிமித்தம் அவருக்கு பின்வரும் சந்ததியும் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவனால் கூறப்பட்டிருந்ததால், தாங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கர்த்தராகிய இயேசுவிடம் கூறினார்கள். கர்த்தராகிய இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரி யைகளைச் செய்வீர்களே என்றார். ஏனெனில், ஆபிரகாமோ, கர்த்தர் பேசும் போது, கர்த்தருடைய குரலை அறிந்து, கர்த்தருடைய வார்த்தைக்கு எப்போதுமே கீழ்ப்படிந்தார். ஆனால், மதத்தலைவர்கள் முன்னிலையில் கர்த்தராகிய இயேசு நின்ற போதிலும் அவர்களோ கர்த்தரை யார் என்று அறிய முடியாமல், தங்கள் இருதயங்களை கடினப்படுத்திக் கொண்டார்கள். எனவே இவர்கள் ஆபிரகாமுக்கு பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்வதினால் இவர்களுக்கு உண்டாகும் பலன் என்ன? உண்மையிலே வம்சவரலாற்றின்படி அவர்களும்; ஆபிரகாமின் பிள்ளைகளே, ஆனாலும், கர்த்தருடைய உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருந்தபடியால், அவருடைய வசனதை அறியாமற் போனார்கள். அதனால், அவர்கள் ஆபிரகாமுடைய சந்ததியினராக இருந்தும், அவர்கள் ஆசீர்வாதத்தின் பிள்ளைகளாக இருக்கவில்லையே, மாறாக பிசாசானவனுக்குரியவர்களாகவே இவர்களும் இருந்தார்கள். (யோவான் 8:37,44). நம்முடைய பூர்வீகங்களினாலே நமக்கு மேன்மை ஏதுமில்லை. நாம் கிறிஸ்துவின் உபதேசத்திலே தரித்திருப்பதினாலேயே ஆசீர்வாதத்தின் பிள்ளைகளாக இருக்க முடியும்.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் தேவனே, பூர்வீகங்கள், வம்சவரலாறுகள் போன்ற வற்றினால் உண்டாகும் புத்தியீனமான தர்க்கங்களையும் விட்டு கிறிஸ்து வின் உபதேசத்தில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:3