புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 19, 2022)

யார் அந்த மணவாட்டி சபை?

லூக்கா 12:40

அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த கன்னிகையொருத்தி உத்தமமான புருஷனொருவனுக்கு நியமிக்கப்பட்டிருந்தாள். தனக்கு முன் குறிக்கப்பட்ட புனித மெய்விவாகத்தின் நாள்வரைக்கும், அவள் தன்னை எவ்விதத்திலும் கறைப்படுத்திக் கொள்ளாமலும், கற்புள்ள மணவாட்டியாகவும், ஊர் மக்கள் மத்தியிலே சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து, தனக்கு நியமிக்கப்பட்ட மணவாளனுக்கு விசுவாசமுள்ளவளாக பொறுமையோடு காத்திருந்தாள். இவ்வண்ணமாகவே, இந்த பூமியிலேயுள்ள கிறிஸ்துவின் சபையானது மணவாட்டிக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றது. சபை என்று கூறும் போது, அது ஆலயத்தின் கட்டிடம் அல்ல. எந்த ஒரு ஆலயத்தின் பெய ருமல்ல. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய வார்த்தையில் நிலைத்திருந்து, அவருடைய வருகைக்காக காத்திருக்கும் அவருடைய ஜனங்களே அந்த மணவாட்டி சபைக்கு ஒப்பிடப்ப டுகின்றது. மணவாளனாகிய மீட்பர் இயேசு சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலா னவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மை த்தாமே அதற்காக ஒப்புக் கொடுத்தார். உத்தம மணவாளனாகிய கிறிஸ் துவின் வருகைக்காக காத்திருக்கும் கற்புள்ள கன்னிகைகளைப் போல, நாம் அவருக்கு விசுவாசமுள்ளவர்களாக வாழவேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட அந்தக் கதையிலே, குறிப்பிட்ட ஊரில் வாழ்ந்த கன்னிகை, மணவாளனுக்காக காத்திருக்கும் காலத்திலே, தன் மனதை வேறு புருஷர்கள் பக்கமாக திருப்பினால், அவள் தனக்கு நியமிக்கப்பட்ட மணவாளனுக்கு துரோகம் செய்கின்றவள் என்றும், அப்படிப்பட்ட நடத்தையை விபசாரம் அல்லது வேசித்தனம் என்றும் ஊரார் கூறுவார்கள் அல்லவா. அதுபோலவே, சபையாகிய மணவாட்டியாக, கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கும் நாம், நம்முடைய கவனத்தை எப்போதும் கிறிஸ்து வின்மேல் பதிய வைத்தவர்களாக இருக்க வேண்டும். அந்நிய காரியங்கள் மலிந்து போயிருக்கும் இந்த நாட்களிலே, நித்திய வாழ்வுக்கு அழைப்பை பெற்ற சிலர், தாங்கள் பரந்த மனமுடையவர்கள் என்று பல விதமான அந்நிய காரியங்களிலும், சடங்காச்சாரங்களிலும் மனதார பங்கேற்கின்றார்கள். நீங்களோ விழிப்புள்ளவர்களாய், வேறு பிரிக்கப்பட்ட வர்களாய் கிறிஸ்துவின் வருகைக்காக பொறுமையோடு காத்திருங்கள்.

ஜெபம்:

என்னை தெரிந்து கொண்ட தேவனே, மனிதர்கள் மத்தியிலே பெயர் பெற்றிருக்கும் 'பரந்த மனம்' என்னும் கொள்கையினால் நான் என்னை தீட்டுப்படுத்தாதபடிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 11:2-3