தியானம் (சித்திரை 11, 2022)
குறைகளை நிறைவாக்கும் தேவன்
பிலிப்பியர் 4:19
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
ஒரு மனிதனானவன், தான் செல்ல வேண்டிய நீண்ட பயணத்திற்குரிய ஆயத்தங்களை செய்து கொண்டான். தான் தாபரிக்கும் ஊரை சுகமாக சென்றடையும்வரை, தன் பயணத்திற்கு அத்தியவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மிகுந்த ஆவலோடு, தன் குடும்பம் சகிதம் பயணத்தை தொடங்கினான். போகும் வழியிலே, பலவிதமான ஊர்களையும், பல்லின மக்களையும் சந்தித்தான். அநேக கடைத் தெருக்கள் இருந்தன. பல கவ ர்ச்சியான பொருட்களும் அங்காங்கே அழகாக காட்சியளித்தன. பயணத்தின் ஆரம்ப த்திலே தன் இலக்கைக் குறி த்து மிகவும் கருத்துள்ளவ னாக இருந்தவன், போகும் வழியி லே, பிள்ளைகள் ஆசைப்பட்ட சில பொருட்களையும், வேறு சில அவசியமான பொருடகள் போல காட்சியளித்த வஸ் துக்களையும் வாங்கிக் கொண்டு. அவைகளையும் சுமந்து கொண்டு சென்றான். இப்படியாக நாளுக்கு நாள், அவன் பயணத்திலே அநேக சுமைகளை ஏற்றுக்கொண்டு, நாளடைவிலே பாரச் சுமையால் சோர்ந்து போய், நடு வழியிலே இருந்த ஒரு அழகான பட்டணத்திலே தங்கி விட்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த சம்பவத்தை மையமாக வைத்து, நம்முடைய பரலோக ஜீவ யாத்திரையைக் குறித்து தியா னம் செய்வோம். நாம் நம்முடைய பரம பந்தயப் பொருளாகிய நித்திய ஜீவனை பரலோகிலே பெற்றுக் கொள்ளும்படியாக இந்தப் பூமியை கடந்து கொண்டிருக்கின்றோம். அந்த வழியிலே நமக்கு தேவைகள் உண்டு. நம்முடைய பரம பிதா அதை அறிந்திருக்கின்றார். ஆனால், நலமாகவும் கவர்ச்சியாகவும் தோன்றும் இந்த பூமிக்குரியவைகளைக் குறித்து நாம் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவை களையும் நாம் பற்றிக் கொள்வோமானால், அவை நம்மை இறுகப் பற்றிக் கொள்ளும். ஈற்றிலே அது நம் ஆத்துமாவை இந்த பூமிக்குரிய ஆசையோடு ஒட்டிக் கொள்ளச் செய்து விடும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். அதற்கு மேலாக நம் கண்களை கவர்ந்து கொள்ளும் பாரமானவைகளை நம்மேல் நாமே ஏற்றிக் கொள்ளாமல், விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;. நம்முடைய தேவன் நம் தேவைகளை அறிதிருக்கின்றார்.
ஜெபம்:
நித்திய வாழ்வுக்கென்று நம்மை முன்குறித்த தேவனே, இந்த ஜீவ யாத்திரையிலே என் ஆசை மண்ணோடு ஒட்டிக் கொள்ளாமல், பந்தயப் பொருளின்மேல் இருக்கும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2