புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 29, 2022)

விழிப்புடன் தரித்திருப்போம்

2 பேதுரு 3:12

தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்;


'கடைசிக்காலம், இறுதிக்காலம், நாட்கள் சீக்கிரமாய் கடந்து போகின்றது என்று என் தாத்தாவும் சொல்லக் கேட்டேன், என் தகப்பனாரும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இப்போது அவர்கள் இங்கே இல்லை. என்னுடைய பிள்ளைகளும் வளர்ந்து வருகின்றார்கள். எத்தனையோ ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டது. இன்றும் அதே வார்த்தைகளை சொல்லக் கேட்கின்றேன்' என்று ஒரு மனிதனானவன் நாட்களை குறித்து தன் போதகரிடம் கூறினான். போதகர் மறுமொழியாக: எந்த ஒரு மனிதனும் இந்த பூமியிலே தன் பெலத்தோடு எத்தனை ஆண்டுகள் வாழக்கூடிடும்? என்று கேட்டார். அதற்கு அவன் மறு மொழியாக: போதகரே, என்னைப் பொறுத்தவரை எந்த மனிதனும் எவரையும் தங்கி வாழாமால் ஆகக் கூடியது 70 வருடங்கள் வாழமுடியும். அதன் பின்பு அவன் இன்னுமொரு 30 வருடங்கள் வாழ்ந்தாலும் அவன் பெலன் குன்றினவனாகவும், வருத்தத்தோடு தன் நாட்களை கழிக்கின்றவனுமாகவே இருப்பான் என்றார். அதற்கு போதகர்: மகனே, உனக்கும் ஆகக்கூடியது அத்தனை வருடங்களே இருக்கின்றது. அவை சீக்கரமாய் கடந்து போகின்றது அல்லவா? நாளையைக் குறித்த நிச்சயம் நம்முடைய கையிலே இல்லை. எனவே, உனக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற எந்த வேளையையும் கர்த்தர் வருகின்ற நாளாக இருக்கலாம் அல்லது இந்தப் பூமியிலே நாம் உயிரோடு வாழும் கடைசி நாளாக இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையை பொறுத்த வரையில், நியாயத்தீர்ப்புக்கு முன்பு நாம் உயிரோடிருக்கும் ஆண்டுகள் மிகவும் குறுகியதே. எனவே, கர்த்தருடைய நீடிய பொறுமையைக் குறித்து சலிப்படையாமல், அவருடைய வார்த்தையை விசுவாசித்தவர்களாக, நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களை உணர்ந்தவர்களாக, பொறுமையுடனும், விழிப்புடனும் வாழ்வோமாக என்றார். ஆம் பிரியமானவர்களே, ஒருவேளை கர்த்தர் வருகின்ற நாள் நாம் இந்த பூமியிலே உயிரோடிக்கின்ற நாளாக இருக்கலாம் அல்லது நாம் இந்த பூமியையை விட்டு கடந்து சென்ற பிற்பாடுகூட அந்த நாள் வரலாம். ஆனால் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்கள் வெகுவிரைவாக கடந்து செல்கின்றது எனவே தேவனை சந்திக்கும்படி ஆவலோடு நாம் தினமும் வாழ வேண்டும். நாம் கறையற்றவர்களும் பிழையில்லாதவர் களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி சோர்ந்து போகாமல், விழிப்புடன் காத்திருப்போமாக.

ஜெபம்:

வாக்குரைத்த தேவனே, நீர் வருவீர் என்ற வாக்குத்தத்தை குறித் து நான் எண்ணமற்றவனாய் வாழாதபடிக்கு நீர் மறுபடியும் வந்து என்னை உம்முடன் சேர்த்துக் கொள்வீர் என்ற விசுவாசத்துடன் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:1-3