புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 02, 2022)

ஜெயமெடுக்கும் வாழ்க்கை

யோவான் 6:38

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.


பிதாவாகிய தேவனுடைய ஆளுகைக்குள் இருக்கின்றவர்கள் எப்போதும் ஜெயம் கொள்ளுகின்றவர்களாக இருக்கின்றார்கள். அந்த ஜெயம் என்ன? பிதாவாகிய தேவனுடைய சித்தமானது, இந்த உலகத்திலே நிறை வேறும்படிக்கு, தங்களுடைய வாழ்க்கையை முற்றிலுமாய் அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடு ப்பதே அந்த ஜெயமாக இருக்கின்றது. ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்தபோது, ஜெயமெடுக்கும் வாழ்க்கையின் வழியை நமக்கு வாழ் ந்து காண்பித்தார். 'அந்நாட்களிலே, ஆண்டவராகிய இயேசு ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார். பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். (லூக்கா 6:12-13).' அதாவது, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை இந்த உலகத்திலே நிறைவேற்றுவதற்காக, அப்போஸ்தலர்களை தம் இஷ்டப்படி தாம் தெரிந்து கொள்ளாமல், பரலோகத்தின் சித்தம் இந்த பூவுலகிலே நிறைவேறும்படி, தேவனுடைய சமுகத்திலே தனித்திருந்து ஜெபம் பண்ணினார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். (மத்தேயு 14:23) அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார். (மாற்கு 1:35). இப்படியாக, தனித்திருந்து தம் பிதாவை நோக்கி, ஜெபம்பண்ணி, அவருடைய வழிநடத்திதலுக்காக எப்போதும் காத்திருந்தார். மேலும், அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலும், அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலி வமலைக்குச் சென்று தம் சீஷர்களைவிட்டுவிட்டுக் கல்லெறிதூரம் அப்பு றம்போய், முழங் கால்படியிட்டு: பிதாவே, உமக்குச் சித்தமானால் இந் தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். பிரியமானவர்களே, கருப்பொருளாவது, நாம் ஜெயம் கொள்ளும் வாழ்க்கை வாழும்படிக்கு நாம் தனித்திருந்து பிதா வாகிய தேவனிடம் தினமும் ஜெபிக்க வேண்டும்.

ஜெபம்:

பிதாவாகிய என் தேவனே, உம்முடைய சித்தத்தை இந்த பூமியிலே நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் மேன்மை என்பதை அறிந்து வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 12:49