புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 01, 2022)

நிறைவான உறவு

மத்தேயு 7:24

ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.


புதிதாக திருமணமாகிய இளம் தம்பதிகளானவர்கள், தமது ஆரம்ப நாட் களிலே, தங்கள் இருவருக்குமிடையே காணப்பட்ட புரிந்துணர்வும் அன்பும் சம்பூரணமானது என்று திட்டமாக கூறிக் கொண்டார்கள். நாட்கள் கடந்து சென்ற போது, அவர்கள் வாழ்விலே ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்களாலும்; சவால்களாலும் அவர்களுக்கிடையே சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்தது. ஒரு சில ஆண்டுகள் கடந்து சென்ற போது, தங்களுக்கிடையே உள்ள புரிந்துணர்வு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது என்பதையும், இருபகுதியினரும் இன்னும் அதிகமாக தமது உறவிலே வளருவதற்கு இடமுண்டு என்பதையும் அவர்கள் அறிந்துணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள். இந்த பூமியிலே மனிதர்களுக்கிடையிலே பல ஒப்பந்தங்களும், உறவின் பிணை ப்புக்களும் ஏற்படுத்தப்படுகின்றது. அந்த உறவிலே சம்மந்தப்பட்ட இரு தரத்தாரும் குறைவுள்ளவர்களும், தவறிப்போகக் கூடியவர்களும், மட்டு ப்படுத்தப்பட்டவர்களுமாயிருக்கின்றார்கள். இருதரத்தாரும் ஒருவரை ஒருவர் அறிகின்ற அறிவிலே வளரவேண்டும். அந்த வளர்ச்சியின் பாதையிலே இருதரத்தாருடைய உறவுகளுக்கிடையே விரிசல்கள், ஒருவரையொருவர் குறித்த தவறான அபிப்பிராயங்களும் ஏற்படலாம். இந்த பூமிக்குரியவர்களுடைய ஒப்பந்தங்களும் உறவுகளும் இத்தகைய தன்மையுடையதாகவே இருக்கின்றது. ஆனால் நாம் நம்முடைய ஆத்தும நேரசராகிய இயேசுவுடன், நாம் கொண்ட உறவானது அப்படிப்பட்டதல்ல. ஆண்டவர் இயேசுவுடன் நாம் கொண்டிருக்கும் உறவிலே நாம் குறை வுள்ளவர்களும், தவறக் கூடியவர்களும், மட்டுப்படுத்தப்பட்டவர்களுமாயிருக்கின்றோம். ஆனால் கர்த்தராகிய இயேசுவோ, சம்பூரண முள்ளவரும், கிருபை நிறைந்த வரும், யாவற்றையும் அறிந்தவராய் இருக்கின்றார். எனவே, அவரிலே சார்ந்து வாழ்பவர்கள் புத்தியுள்ளவர்களும் பாக்கியம் பெற்றவர்களுமாயிருக்கின்றார்கள். நாம் ஆண்டவராகிய இயேசுவின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் போது, நாம் ஜெயம் எடுக்கின்றவர்களாக இருப்போம். ஏனெனில் அவருடைய ஆளுகையிலே தோல்வி யென்பதில்லை. அவருடைய ஆளுகைக்கு உட்பட்டவர்கள் முடிவிலே மகிமையிலே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, உம்மை சார்ந்து வாழ்வதன் மேன்மையையும் பாக்கியத்தையும் நான் உணர்ந்து கொள்ளும்படிக்கு, பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 16:33