புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 24, 2022)

ஆத்துமா இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்

சங்கீதம் 35:9

என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.


முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட் டினார்கள். நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள். ஆண்டவரே, எதுவ ரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என்று தாவீது என்னும் தேவபக்தனானவர் காரணமில்லாமில் தனக்கு தீங்கு நினைக்கின்றவர்களைக் குறித்தும் தன் சார்பாக செயலாற்றும்படிக்கும் தேவனாகிய கர்த்தரிடம் தன் நிலைமையைக் குறித்து விண்ணப்பம் செய்தார். மேலும் அவர் கூறுகையில், தன்னை எதிர்த்து நிற்கின்றவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது. நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது. நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன். தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன். ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள். அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரி யாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள் என்றார். பிரியமானவர்களே, இதற்கொத்ததான சூழ்நிலைகளை, ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலே, ஒவ்வொரு மனிதர்களும் கடந்து செல்கின்றார்கள். நாமும் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மேலே குறிப்பிடப்பட்ட சூழ்நிலையிலே, இரண்டு விதமான மனிதர்களை நாம் காண்கின் றோம். ஒரு பகுதியினர் தாவீதைப் போல, தங்களிடமிருந்து நன்மையை பெற்றவர்களால் துன்புறுத்தப்படுகின்றார்கள். இன்னுமொரு பகுதியினர், நன்றிமறந்தவர்களாக தங்களுக்கு நன்மைகள் செய்தவர்களை துன் பப்படுத்துகின்றார்கள். நாமோ, கிறிஸ்துவினிமித்தம் நன்மை செய்து பாடநுபவிக்கிறவர்களாகவும் உபத்திரவங்களை சகிக்கின்றவர்களாகவும் இருக்க வேண்டுமே தவிர ஒரு போதும் மற்றவர்களை உபத்திவரப்படுத்துகின்றவர்களாக மாறிவிடக் கூடாது. நம்முடைய விலையேறப் பெற்ற ஆத்துமா திக்கற்றுப் போகாதபடி நாம் எத்துன்ப வேளையிலும், மற்ற வர்களுக்கு தீங்கு நினையாமல், ஆண்டவர் இயேசு வழியாக நாம் பெற்ற இரட்சிப்பில் மகிழ்ந்து களிகூருவோம்.

ஜெபம்:

சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கு விடுவிக்கின்ற தேவனே, என்னுடைய ஆத்துமா திக்கற்றுப் போகாமல், உம்மில் களிகூர்ந்து, உம்முடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருப்பதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:9

Category Tags: