புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 09, 2022)

சிறைப்பட்டோருக்கு விடுதலை

1 யோவான் 4:14

பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.


தேவனாகிய கர்த்தர்தாமே தம்முடைய ஜனங்களை நோக்கி: ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலையைக் கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன். அந்த வருடத்திலே, ஒவ்வொருவரும், மற்றவர்கள் பட்ட கடன்களை மன்னித்து விட வேண்டும். காணியாட்சிகள் அதன் சொந்தக் காரரால் மீட்கப்படுவதற்கு இடங் கொடுக்கப்படல் வேண்டும். அடிமைகளாக இருந்தவர்கள் அடிமைத் தனத்திலி ருந்து விடுலையாக்கப்பட்டு சுதந்தரவாளியாக விடப்பட வேண்டும். காவலிலும், சிறையிருப்பிலும், கட்டுகளிலும் இருப்பவர்கள் விடுதலையாக்கப்பட வேண்டும் என்றும் உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது. உங்கள் தேவனுக்குப் பயப்பட வேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று கட்டளையை கொடுத்திருந்தார் (லேவியராகமம் 25). இன்றை உலகிலே, எங்கள் வாழ்க்கையிலே சிறை வாழ்வு என்று ஒன்றுமில்லை. எல்லாம் நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கின்றது என்று சில மனிதர்கள் கூறிக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் தங்களை அறியாமலே பலவிதமான காவல்களிலும், பாவக் கட்டுக்களிலும், அடிமைத்தனங்களிலும் தங்கள் வாழ்க்கையை சிறைப்படுத்தியிருப்பதை உணராது வாழ்ந்து வருகின்றார்கள். பாவ இருளிலே வாழ்ந்து கொண்டு, தெய்வீக ஒளியைக் காணமுடியாமல் இருக்கும் யாவரும் இந்த உலகிலே ஏதோ ஒரு காரியத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றார்கள். உலகிலுள்ள நன்மையானவைகளை பின்பற்றுகின்றோம் என்று வாழ்பவர்களும், நன்மைகள் என்று கருதப்படும், தமது வேலைகளினா லும், கல்வியினாலும், சமுக அந்தஸ்தினாலும் தேவ நன்மையை உணர முடியாமல் தங்களைளே தாங்கள் சிறைப்படுத்திக் கொள்கின்றார்கள். பழைய ஏற்பாட்டின் காலத்திலே ஐம்பதாவது வருடத்தை விடுதலை யின் வருடம் என்று பிரகடனப்படுத்தினார்கள். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை கொடுக்கும்படியாக இந்த உலகத்திற்கு இரட்சகராக வந்தார். அவர் வழியாக எப் போதும் விடுதலையை நாம் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை பெற் றிருக்கின்றோம். கிறிஸ்துவுக்குள்ளே எப்போதும் நாம் விடுதலையின் யூபிலி வருடத்தை கொண்டாடுபவர்களாக இருக்கின்றோம்

ஜெபம்:

பாவக்கட்டுகளிலிருந்து விடுதலை தரும் தேவனே, என் வாழ் வை கட்டுப்படுத்தி, சிறைப்படுத்தும் இந்த உலகத்தின் காரியங்களிலிருந்து எனக்கு பூரண விடுதலையை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:1