புதிய நாளுக்குள்..

தியானம் (தை 06, 2022)

குறைவற்ற வாழ்வின் வழி எது?

சங்கீதம் 34:9

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.


தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள், தேவனுடைய வார்த்தையைக் கேளாமல், தங்களையும், தேவனுடைய ஆலயத்தையும், தேசத்தையும் தீட்டுப்படுத்தி, பொல்லாத வழிகளை தங்களுக்கென தெரிந்து கொண்டார்கள்;. அவர்களது அக்கிரமத்தின் வழிகளை குறித்து அநேக ஆண்டுகளாக தேவனாகிய கர்த்தர் எச்சரித்து வந்தும் அவர்கள் தேவனுடைய எச்சரிப்பையோ இன்னும் அதிகதிகமாக அசட்டை பண்ணி வந்தார்கள். தங்களுக்கு தேவ வார் த்தைகளைக் கூறுகின்றவர்களை சிறைப்படுத்தி, துன்பப்படுத்தினார்கள். தேவனுடைய நியாயத்தீர்ப்பு அவர்கள்மேல் வந்த போது. பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றுகையிட்டு, அதை பாழாக்கி, சுட்டெரித்து, ஜனங்களை சிறைப்பிடித்துக் கொண்டு பாபிலோனுக்கு சென்றான்;. இது தேவனால், தம்முடைய கீழ்படியாமையின் பிள்ளைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. பிரியமானவர்களே, தேவன் நம்முடைய வழிகளைக் குறித்து நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். அவருடைய கிருபையினாலே நாம் நீர்மூலமாகாமல் இருக்கின்றோம். யார் தேவனுடைய எச்சரிப்பை அசட்டை செய்து வாழ முடியும்? எவ்வளவு காலமாக ஒருவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் வாழ முடியும்? என்னு டையவர்கள் எனக்கு செவிகொடுக்கின்றார்கள் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். (யோவான் 10:3-4). ஒருவன் தான் தேவனுடைய பிள்ளை என்று சொல்லியும் ஆண்டவராகிய இயேசுவின் சத்ததிற்கு செவிகொடுக்காமல் வாழ்ந்தால், அவன் யாருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கின்றான்? சற்று சிந்தித்துப் பாருங்கள். கடந்த ஆண்டிலே நீங்கள் ஆண்டவர் இயேசுவுக்குள் வெற்றி வாழ்க்கை வாழ்ந்திருந்தால், அதாவது, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை உங்கள் தனிப்பட்ட வாழ்விலே நிறைவேற்றியிருந்தால் அதை தொடர்ந்து செய்யுங்கள். ஆனால், கடந்த ஆண்டிலே உங்கள் வாழ்க்கையிலே ஏற்பட்ட சூழ்நிலைகளினாலே தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடாமல் போனதினால் ஏற்பட்ட பின்விளைகள் என்ன? இந்த ஆண்டிலே, திரும்பவும் பின்வாங்கிப் போகாதபடிக்கு, நான் என் வாழ்க்கையிலே என்ன மாற்றங்களை செய்திருக்கின்றேன் என்பதை ஆராய்ந்தறியுங்கள். பிரியமானவர்களே, அனுதினமும் கருத்தோடு வேதத்தை வாசித்து, தியானித்து, ஜெபியுங்கள். சோதனை யின் நாட்களிலே, மனதை கடினப்படுத்தாமல், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியுங்கள்.

ஜெபம்:

ஒரு நன்மையுங் குறைவுபடாதபடி வாழ்வின் வழியை கற்றுத் தரும் தேவனே, இந்த புதிய ஆண்டிலே, என் வாழ்விலே நான் நன்மையான மாற்றங்களை செய்யும்படிக்கு எனக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:22-23