புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 17, 2021)

பக்திவிருத்திக்கு ஏதுவானவைகள்

எபேசியர் 4:29

பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.


'நீ தான் பேச்சு வல்லமையுள்ளவன். எப்போதும், எந்த மனிதர்களுக்கும் பயப்படாமல், துணிவாகக் கேள்விகளை கேட்பவன்.' என்று ஒரு சனசமூக நிலையத்தின் அங்கத்தவனாக இருந்து வந்த மனிதனானவனொருவனை அவனுடைய நண்பர்கள் பாராட்டிக் கொண்டார்கள். தன் நண்பர்கள் தன்னைப் பற்றி பெருமிதமாகக் கூறிக் கொண்டதால், அந்த அங்கத்தவ னும் தான் எப்போதும் கேள்விகளை கேட்க வேண்டும் என்ற எண்ணமு டையவனான். இதனால் அவன் எந்த சிந்தனையும் இல்லாமல், தீவிரமாக கேள்விகளை கேட்பதையே பழக்கமாக்கிக் கொண்டான். இதனால் பலர் அவனோடு பேசுவதை படிப்படியாக தவிர்த்துக் கொண்டார்கள். பல ஆண்டுகள் சென்றபின்பு, தன் பேச்சு தன் காட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பதை அவன் உணர ஆரம்பித்தான். ஆம் பிரியமானவர்களே, ஒரு மனிதன் பின்விளைவுகளை சிந்திக்காமல், பேசப் பழகிக் கொள்ளும் போது, அவன் இந்த உலகத்திலே பேச்சு வல்லமையுள்ளவன் என்று கருதப்படலாம். ஆனால் நினைக்காமல் வாயில் வந்ததை பேசுபவனும், தான் நினைத்ததை எல்லாம் நிதானித்தறியாமல் பேசுபவனும் தன் நாவை கட்டுப்படுத்தாத மனிதனாக இருக்கின்றான். இப்படிப்பட்டவனுடைய பேச்சு அவன் கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டதாயிருக்கிறது. இன்று நாம் நம் வாழ்வை குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய பேச்சு நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றதா? அல்லது கட்டு மீறியிருக்கின்தா? நம்முடைய வாயின் வார்த்தைகள் நமது கட்டுப் பாட்டை மீறியிருக்கும் என்றால் நாம் தேவனுடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்து, அவைகளை அதிகதிகமாக தியானிக்க ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய பேச்சு நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்குமென்றால், அவை தேவனுடைய வசனத்தின்படி கட்டுப்ட்டிருக்கின்றதா அல்லது உலக முறைமைகளின்படி கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றதா என்பதை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள் அதைக் கேட்கின்றவர்களுக்கு பக்திவிருத்திக்கு ஏதுவானவைகளாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயம் எதினால் நிறைந்திருக்கின்றதோ, அதுவே நம் வாயினாலே பேசப்படும். எனவே தேவனுடைய வார்த்தையாகிய பொக்கிஷத்தினால் நம்முடைய இருதயங்களை நாம் நிறை த்துக் கொள்ளும்படி அவைகளையே எப்போதும் தியானிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

என் இருதயத்தின் நினைவுகளை அறிந்த தேவனே, என் நினைவும் என் பேச்சும் உம்முடைய வார்த்தையின்படி பக்திவிருத்திக்கேற்றவைகளாக இருக்கும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 3:9-10