புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 07, 2021)

ஆசையும் வாஞ்சையும்

மத்தேயு 6:21

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங் கள் இருதயமும் இருக்கும்.


ஒரு மனிதனானவன் தனக்கு கிடைக்கு பணத்தின் கணிசமான ஒரு பகுதியை, பல்வேறுபட்ட மோட்டார் சைக்கிள்களை வாங்குவதிலும், அவற்றை சேகரிப்பதிலும், தன் ஓய்வு நேரத்தின் பெரும் பகுதியை அந்த மோட்டார் வண்டிகளை பராமரிப்பதிலும், அவைகளைப் பற்றி தன் நண் பர்களோடு பேசுவதிலும் செலவழித்து வந்தான். அவன் அயலில் வாழ்ந்த அயலவனோ, ஓய்வு நேரங்களிலே, முன்னோடிகளாக வாழ்ந்த பரிசுத்தவான்களின் சுய சரிதைகளை படிப்பதும், அவர்கள் எப்படியாக வெற்றி வாழ்க்கை வாழ்ந்தார்கள் என் பதைக் குறித்து ஆராய்ந்து பார்ப்பதிலும், அவர்களைப் போல தானும் வாழவேண்டும் என்ற எண்ணமுடையவனாகவும், தன் சக நண்பர்களுடன் இவைகளைப்பற்றி பேசுவதிலும் தன் நேரத்தை செலவழித்து வந் தான். இவர்கள் இருவரின் ஆசையும் வாஞ்சையும் எதைப் பற்றியிருக்கின்றது? உங்களில் யாராவது உலக பொருட்களில் ஆசையில்லாமல் மோட்டார் சைக்கிள்களை வாங்குவதில் பணத்தை செலவழித்து, அவைகளை சேகரித்து பராமரித்து வருவானோ? அதுபோலே மனிதர்களுடைய ஆசை எதைப் பற்றியிருக்கின்றது என்பதை அவர்கள் வாழ்க்கையின் வழியாக நாம் நிதானித்து அறிந்து கொள்ளலாம். இது மற்றவர்களுடைய வாழ்க் கையைக் குறித்ததல்ல, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையைக் குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். பணத்தை சேர்த்து வைக்கும் சில மனிதர்கள் தங்களுக்கு பண ஆசையில்லை என்று கூறிக்கொள்வார்கள். பொருட்களை சேர்க்கின்ற சிலர் தங்களிடம் பொருளாசை இல்லை என்று சொல்லிக் கொள்வார் கள். நாம் அவர்களை நியாயம் தீர்ப்பதற்கு நாம் அவர்களுடைய நியாயாதிபதிகள் அல்ல. ஆனால், அவர்கள் அழிந்து போகும் தங்கள் ஆசை இந்த மண்ணோடு ஒட்டிக் கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்முடைய பணம் எங்கே செலவாகின்றது? நம் முடைய அதிகப்படியான நேரம் எப்படி செலவிடப்படுகின்றது? இந்தப் பூமிலே நாம் எதை சேர்த்து வைக்கின்றோம்? அதிகப்படியாக பேச்சு யாரோடு இருக்கின்றது? எதைப் பற்றியிருக்கின்றது? என்ற கேள்வி களை நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் கேட்டு, நம்முடைய நிலைமையை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். மனிதனுடைய பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே அவனுடைய இருதயமும் இருக்கும். நம்முடைய தேவன் இருதயங்களின் நினைவுகளை ஆராய்ந்து அறிகின்றவராயிருக்கின்றார்

ஜெபம்:

தேவனாகிய கர்த்தாவே, நீர் என் இருதயத்தின் நினைவுகளை அறிந்திருக்கின்றீர். என்னுடைய ஆசையும் வாஞ்சையும் பரலோகத்தைப் பற்றியிருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:1-4