புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 22, 2021)

தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை

யாக்கோபு 4:6

ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.


தாவீது ராஜா, தேவனுக்கு விரோதமான இரண்டு பெரும் பாதகங்களை செய்தார் என்று வேதத்திலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 1. ராஜாக்கள் யுத்தத்திற்கு போகும் காலத்திலே, தாவீது ராஜா எருசலேமிலே தரித்திருந்து, பத்சபாள் என்ற ஸ்திரியினிடத்தில் பிரவேசித்து, பாவம் செய்தார். (2 சாமுவேல் 11) 2. கர்த்தர் தேசத்தின் பெலன் என்பதை அறிந்திருந்தும், தன் பெலத்தை கணக்கிடும்படி, யுத்தத்திற்கு செல் லக் கூடிய வீரர்களை கணக்கிட்டார். (2 சாமுவேல் 24). இவை இரண்டும் ஒரு நாளிலே நடைபெறவில்லை, பல மாதங்களாக தாவீது ராஜா இந்தப் பொல்லாப்புக்களை செய்து வந்தார். இரண்டு தடவைகளிலும், தேவனாகிய கர்த்தர், தாவீது ராஜா வினிடத்தில் தன்னுடைய தீர்க்கத ரிசியை அனுப்பினார். தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, தான் பாவம் செய்தேன் என்பதை உணர்ந்து கொண்டபோது. சமஸ்த இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது, 'என் மீறுத ல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும் (சங்கீதம் 51) என்றும் நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கி ரமத்தை நீக்கிவிடும், நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான். (2 சாமு 24). எந்தவிதமான நிபந்தனையுமின்றி, தன்னைத் தாழ்த்தி, நான் பாவம் செய்தேன் என்று தன்னை தேவனிடத்திலே ஒப்புக் கொடுத்தார். தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று எழுதியிருக்கி ன்ற பிரகாரமாக தன்னைத் தாழ்த்தி தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப் படிந்த தாவீது ராஜாவுக்கு தேவன் கிருபை செய்தார். அக்கிரமத்தி னின்று விடுதலையடையும் போக்கை உண்டுபண்ணினார். ஆனால் தம்முடைய கிருபையை உதாசினப்படுத்தும் பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார். எனவே, தேவ கிருபையை உங்கள் வாழ்வில் நன்மைக்காக பயன்படுத்தும்படி தேவனுடைய சமுகத்திலே உங்களைத் தாழ்;த்துங்கள். தேவன் அதிக கிருபை அளிக்கின்றாரே.

ஜெபம்:

தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கும் தேவனே, நான் தவறி விழும்போது நான் என் பெருமையினால் என் நிலைமையை நியாயப்படுத்தாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:5