புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 04, 2021)

கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு...

எபிரெயர் 2:1

ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.


ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திலே பாலகனாக பிறந்த போது, தேவதூதன், பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கி றேன் என்று தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களு க்கு கூறினான். அந்த நாளை கிறிஸ்துமஸ் தினம் என்று இன்று நினைவு கூருகின்றோம். ஆனால் இன்று கிறிஸ்மஸ் என்றால் என்ன என்ற கேள்வியை கேட்கும் போது, பொதுவாக மனிதர்களுடைய பதில் எப்படியாக இருக்கின்றது? அது விடுமுறையின் நாட்கள். கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து சோடினை செய் வோம். புது ஆடைகளை வாங்கு வோம். கிறிஸ்துமஸ் தாத்தா வருவார். புதிய பாடல்களைப் பாடுவோம். பரிசு ப்பொருட்களை வாங்கி ஒருவருக் கொருவர் பரிமாறுவோம் என்றும், புசித்துக் குடித்து உல்லாசமாக இருப்போம் என்ற செய்தியையே உலகம் அறிந்திருக்கின்றது அல்லது உலகதிற்கு அறிவிக்கப்படுகின்றது. அதாவது ஆண்டவர் இயேசு இந்த உலகிற்கு வந்த நற்செய்தியை குறித்து மனிதர்கள் பேசாதபடிக்கு, அந்த நாள் வியாபாரமயமாக் கப்பட்டிருக்கின்றது. அதுபோலவே, ஆண்டவராகிய இயேசு மரணத்தை வென்று உயிர்த்த நாளின் சமாதானத்தின் நற்செய்தியை மனிதர்கள் அறியாதபடிக்கு அந்த நாளிலும் வேறு உலக காரியங்களை உட்புகுத்தி வியாபாரமயமாக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த உலகிலே எப்படிப்பட்ட பெருநாளாக இருந்தாலும் அதை மனிதர்கள் தங்கள் சொந்த இலாபத்திற்காக வியாபாரமயமாக்கி விடுகின்றார்கள். உதாரண மாக, ஞானஸ்நானம் பெற்று ஆண்டவராகிய இயேசுவை சொந்த இர ட்சகராக ஏற்றுக் கொள்ளும் நாள் மிக மகிழ்ச்சியானது. அந்த நாளில் உணவுகளை பரிமாறி சந்தோஷமாக இருப்பதில் தவறில்லை. ஆனால் மனிதர்கள் உட்புகுத்தும் கொண்டாட்டங்களினால், ஞானஸ்நானத்தின் முக்கியத்துவமும், பரிசுத்தமும், பயபக்தியும், தேவ பயத்தைக் குறித்த உணர்வும் அற்றுப் போய்விடாதபடிக்கு நாம் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்று மனிதர்களின் மனதை கவர்ந்து அவர்களின் அங்கீகாரத்தை பெறும்படியாக சத்தியம் கலப்படமாக்கப்படுகின்ற கால மாக இருக்கின்றது. நாம் செய்யும் எந்த கிரியைகளிலும் பிதாவாகிய தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்பதை ஒரு போதும் மறந்து போய்விடாதிருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, எங்கள் மனம் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி தேவ காரியங்களோடு உலக காரியங் களைத் சேர்த்துக் கொள்ளாதபடிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 5:17