புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 03, 2021)

பரிசுத்த அழைப்பு

2 தீமோத்தேயு 1:9

ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.


ஆதியிலே தேவன் பரிசுத்த மெய் விவாகத்தை ஏதேனிலே ஏற்படுத்தினார். அதன் பின்பு, மனிதர்கள் திருமண நாளானது மிகவும் சந்தோஷமான ஒரு நாளாகவும், அந்த நாளை மேன்மைப் படுத்த வேண்டும் என்று பல வைபவங்களை படிப்படியாக ஆரம்பித்தார்கள். யார் யாருடன் சம்பந்தம் கலப்பது? என்ற கேள்வியிலிருந்து திருமண விழா நடக்கும் நாள் வரைக்கும் பல சடங்குகள் நடைபெறுகின்றது. காலப்போக்கில், அவை பாரம்ப ரியமும் களியாட்டமுமாக மாற்ற ப்பட்டு, இன்று ஒரு திருமண விழாவானது நீண்டதும் பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது. அதனால் பல மனிதர்கள், ஆதியிலே தேவன் ஏன் திருமணத்தை ஏற்படுத்தினார் என்பதன் கருப்பொருளை மறந்து அதைக்குறித்த எண்ணமற்றவர்களாக வாழ்கின்றார்கள். இதன்விளைவாக, திருமணத்திற்குப் முன் நடக்க வேண்டியவைகள் பின்னராகவும், திருமணத்திற்கு பின் நடக்க வேண்டியவைகள் முன்னதாகவும் நடைபெறுகின்றது. அது மட்டுமல்லாமல் தேவன் குறித்த திருமணத்தின் வரைவிலக்கணத்தையே இன்று பல நாடுகள் மாற்றிக் கொண்டு வருகின்றது. கருப்பொருளாவது, தேவன் முன்குறித்த காரியங்களோடு, நாம் இந்த உலக பாரம்பரியங்களையும், சடங்குகளையும் சேர்த்துக் கொள்ளும் போது, ஆண்டுகள் கடந்து சென்று புதிய சந்ததிகள் வரும்போது, அவர்கள் தேவன் முன்குறித்ததை அவர் ஏன் முன் குறித்தார் என்பதை மறந்து, பாரம்பரியங்களையும்; சடங்காச்சாரங்களையும்; களியாட்டங்களையும் பற்றிக் கொள்கின்றார்கள். திருமணம் மட்டுமல்ல, தேவன் முன்குறித்தவைகளுடன் இந்த உலக முறைமைகளை சேர்த்துக் கொள் வதைக் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இப்படியாக, மனிதர்கள் பிள்ளைகளை பெற்றுக் கொள்வ திலும், வளர்ப்பதிலும், பாடசாலைக்கு கொண்டு செல்வதிலும், பொழுது போக்கிலும், பல உலக வழிமுறைகளை உட்படுத்திக் கொள்வதால், இவர்கள் அவர்களது வாழ்க்கையில் மதவழிமுறைகளிலும் பாரம்பரியங்களிலும், சடங்காச்சாரங்களிலும் ஒரு பகுதியாகவே மாறிக் கொண்டு போகின்றது. பிதாவாகிய தேவன்தாமே, நாம் பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு, இயேசுவின் நாமத்திலே பரிசுத்த அழைப்பினாலே நம்மை அழைத்தார் என்பதை நன்கு உணர்ந்தவர்களாக எதைச் செய்தாலும் அழைப்பின் நோக்கத்தை மறந்து விடாதிப்போமாக.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு என்னை வேறுபிரித்த தேவனேஇ என் வாழ்வில் நடக்கும் எந்த வைபவங்களிலும் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எரேமியா 1:5