புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 26, 2021)

என் வாழ்வின் மேன்மை என்ன?

சங்கீதம் 84:10

ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது;


ஒரு ஊரிலே வசித்து வந்த சிறுமியானவளுக்கு மிகவும் இனிமையான குரல் வளம் இருந்தது. தேசிய மட்டத்திலே நடைபெற்ற முக்கியமான விழா ஒன்றிலே, தேசிய கீதத்தைப் பாடும் குழுவிலே அவள் சேர்த்துக் கொள்ளப்பட்டாள். அதனிமித்தம் அவள் வசித்து வந்த ஊரிலுள்ள ஜனங்கள் அவளைக் குறித்து பெருமிதமாக பேசிக் கொண்டார்கள். அவள் குடும்பத்தாரும் உறவினரும் அவளைக் குறித்து பெரு மகிழ்ச்சியடைந்தார்கள். அதிகாரிகள், பிரபுக்கள் முன்னிலையிலே தேசிய கீதத்தைப் பாடுவதற்குரிய சந்தர்ப்பம் குறிப்பிட்ட ஒரு சிலருக்கே கிடைப்பதுண்டு. உண் மையிலேயே அது பாராட்டக்கூடிய ஒரு விடயம். ஆனாலும், அவளுடைய தகப் பனானவர், அவள் அந்த ஊரிலுள்ள சிறிய ஆலயத்திலே, தேவ கானங்களைப் பாடுவதையே அதிக மேன்மையாக எண்ணிக் கொண்டார். பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலும் சில மேன்மைபாராட்டத் தக்க விசேஷ நிகழ்வுகள் உண் டாயிருக்கலாம். சிலர் தாங்கள் அரசாங்கத்திலே முக்கிய பதவியிலே இருப்பதைக் குறித்து மேன்மைபாராட்டுகின்றார்கள். இன்னும் சிலர் தாங்கள் உலக பிரசித்தி பெற்ற வியாபார ஸ்தாபனங்களிலே வேலை செய்கின்றோம் என்று மேன்மைபாராட்டுகின்றார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட பாடமொன்றிலே தாங்கள் அதிவிசேட சித்தி பெற்றதைக் குறித்து மேன்மை பாராட்டுகின்றார்கள். இதற்கு சில தேவ பிள்ளைக ளும் விதிவிலக்கு அல்ல. எடுத்துக்காட்டாக, என்னுடைய மகள் ஞாயிறு தோறும் ஆலயத்திலே சர்வத்தையும்படைத்த தேவாதி தேவனை துதித்துப் புகழ்பாடுவாள் என்று கூறுவதைவிட, தேசிய மட்டத்திலே நடந்த விழா ஒன்றிலே, பல அதிகாரிகள், பிரபுக்கள், நட்சத்திரங்கள் முன்னிலையிலே என் மகள் தேசிய கீதம் பாடினாள் என்பதைக் குறி த்தே அதிக மேன்மையாக பேசிக் கொள்வார்கள். தேவாதி தேவனுக்கு ஊழியம் செய்வதைவிட, உலக பிரபுக்களுக்கு வேலை செய்வதை அதிக மேன்மையாக சொல்லிக் கொள்வார்கள். உங்கள் வாழ்வின் மேன்மை என்ன என்பதைக் குறித்து இன்று சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவாதி தேவனுடைய சமுகத்திலே நிற்பதற்குரிய சிலாக்கியம் எவ்வளவு மேன்மையானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவனு டைய சமுகத்திலே தங்கியிருப்பவர்கள். பாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் எப்பொழுதும் தேவனை துதித்துக்கொண்டிருப்பார்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்மை நான் அப்பா பிதாவே என்று அழைக்கத்தக்கதாக நீர் எனக்கு கொடுத்திருக்கும் மகா மேன்மையான பாக்கியத்தை உணர்ந்து கொள்ளும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:14