புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 14, 2021)

கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்

எபிரெயர் 10:23

வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.


எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த தேவனுடைய ஜனங்கள், தேவனுடைய பலத்த கரத்தினாலே விடுதலையாக்கப்பட்டு, வாக்களிக்கப்பட்ட செழிப்புள்ள கானான் தேசத்திற்கு, தேவ ஊழியராகிய மோசே வழியாக வழிநடத்தப்பட்டார்கள். “நான் உங்களுக்கு கானான் தேசத்தைக் கொடுப்பேன்” என்று தேவன் வாக்குரைத்திருந்தும், தங்களுடைய எதிரிகளைக் கண்டபோது சோர்வடைந்தார்கள். தேவனே, எங்களைப் பெலப்படுத்தும், எங்களோடு இருக்கும் எங் கள் தேவன் எங்களை கைவிடமா ட்டார் என்கிற விசுவாச வார்த்தைகளை கூறி தேவனிடத்திலே விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, நாங்கள் இந்த வனா ந்திரத்திலே அழிந்து போகும்படிக்கு தேவன் எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தார் என்று பலமுறை தங்கள் வாயினாலே அறிக்கை யிட்டு, தேவனுக்கும், தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேக்கும் எதிராக முறுமுறுத்து, கலகம் பண்ணினார்கள். அதுமட்டுமல்லாது எகிப் திலே தாங்கள் விட்டுவந்த அருவருப்புக்களையும், தீட்டான ஆகாரங்களையும் இச்சித்தார்கள். வேறுபிரிக்கப்பட்ட இந்த தேவ ஜனங்களுடைய வாயின் அவிசுவாச அறிக்கைகளை சற்று சிந்தித்துப்பாருங்கள். பரிசுத்த வாழ்வு வாழும்படியாய் தேவனாகிய கர்த்தர் நம்மை இந்த உலகத்திலிருந்து வேறு பிரித்திருக்கின்றார். வனாந்திரம் போன்ற இந்த உலக வாழ்க்கையிலும் நம்மை நோக்கி உபத்திரவங்களும், சவால்களும், பய ங்கரங்களும் வரும் போது நாம் எப்படியான காரியங்களை மனதிலே சிந்திக்கின்றோம் என்றும், வாயினாலே எதை அறிக்கை செய்கின்றோம் என்றும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். தானியேலும், அவனுடைய நண்பர்களும், சுதந்திரவாளிகளாக வாழ்ந்து வந்த தங்கள் தேசத்திலிருந்து, அடிமைகளாக சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோன் தேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும், அவர்கள் பாபிலோனின் அருவருப்புகளை நோக்கிப் பார்க்காமலும், அந்த தேசத்தின் ராஜாவின் போஜன பதார்த்தங்களால் தங்களை தீட்டுப்படுத்தாமலும் இருந்தார்கள். தேவனுடைய நாமத்திற்காக மரிக்க வேண்டி நேர்ந்தாலும், வேறு எந்த சிலைகளையும் வணங்கமாட்டோம் என்று தேவனைக் குறித்து வைராக்கிய வாஞ்சையுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களைப் போல நாமும் எந்த சூழ்நிலையிலும் கர்த்தருடைய வாக் குத்தத்தத்தைபற்றிக் கொணடு அதிலே நிலைத்திருக்கக்கடவோம். வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, நீர் சொன்னதை செய்து முடிப்பவர் என்பதை நான் ஒரு போதும் மறந்துவிடாமல், உம்முடைய நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருக்க என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோசுவா 23:8