புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 09, 2021)

தேவனுக்கு பிரியமான ஆராதனை

சங்கீதம் 86:12

என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.


“இன்று துதி ஆராதனை நன்றாக இருந்தது” என்று விசுவாசிகள் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். தேவனுக்கு ஏறெடுக்கும் துதிகள் நன்றாக இருந்தது என்று கூறுவதற்குரிய அளவுகோல் எது? அநேக வாத்தியக் கருவிகளை மிகவும் நேர்த்தியாக மீட்டினால் துதி நன்றாக மாறிவிடுமோ? இனிமையான குரலிலே பாடல்களை பாடுவதால் துதி நன்றாக இருக்குமோ? அநேக ஜனங்கள் இன்ரநெற் ஊடகங்களின் ஊடா க தங்கள் விருப்பத்தை (Like) தெரி விப்பதால் துதி நன்றாக இருக்குமோ? வாத்தியக் கருவிகளை நேர்த்தியாக வாசிப்பது நல்லது. இனிமையான குர லிலே துதி பாடல்களை பாடுவது நல்லது. ஆனால் அவைகள் மனிதர்களுடைய மனதிற்கு ஏற்புடையதாகவும், விரும்பத்தக்கதாகவும் இருப்பதால், அந்த துதியானது தேவனுக்கு உகந்த வாசனையாக இருக்கும் என்று நாம் கூறிவிட முடியாது. பொதுவாக மனித ர்கள் தங்கள் உணர்வுகளின்படி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள். சபை நடுவே ஜனங்களோடு நின்று துதிக்கும் வேளையிலே, பலர் பலவிதமாக துதிக்கலாம் அல்லது துதிக்காமல் இருக்கலாம். நாம் மற்றவர்களைக் குறித்து நிதானித்தறியாமல், நாம் முழுமனதோடு தேவ னைத் துதிக்க வேண்டும். தேவனாகிய கர்த்தர் இருதயங்களை ஆராய்ந்து அறிகின்றார். தேவனுக்கேற்ற பலி எது? எங்கள் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலிகளே தேவனுக்கு உகந்த வாசனையாக இரு க்க வேண்டும் என்றால், எங்கள் இருதயம் அவருக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். தம்முடைய வார்த்தைக்கு கீழ்படிகின்றவர்கள், ஏழைக் குடிலிலே தனித்திருந்து துதியை செலுத்தினாலும், அந்த துதியில் தேவன் பிரியப்படுகின்றவராயிருக்கின்றார். “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.” என்று தம்முடைய தீர்க்கதரிசி வழியாக தம்முடைய ஜனத்தை குறித்து தேவன் கூறியிருக்கின்றார். நாம் விசுவாசத்தோடு, ஆபேலைப் போல தேவனுக்கு பிரியமான மேன்மையான பலியை ஏறெடுக்க வேண்டும். நம்முடைய துதி ஆராதனையானது தேவனுக்கு ஏற்புடையதாக இருப்பதே மிகவும் அவசியமானது.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானங்களும் உமது சமுகத்திலே பிரியமானதாக இருக்கும்படிக்கு உணர்வுள்ள வாழ்க்கை வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எசேக்கியல் 33:31