புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 04, 2021)

ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்?

1 பேதுரு 1:23

அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளது மான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்ப ட்டிருக்கிறீர்களே.


ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படி மறுபடியும் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்று மத அதிகாரி ஒருவன் ஆண்டவராகிய இயேசுவிடம் கேட்டான். மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன? ஏன் ஒவ்வொரு மனிதனும் மறுபடியும் பிறக்க வேண்டும்? மனித குலத்தின் முதல் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் தேவ சாயலுடையவர்களாய் சிருஷ்டிக்கப்பட்டார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையை மீறி வஞ்சிக்கும் பிசாசானவனின் வார் த்தைக்கு கீழ்படிந்ததால்: 1. அவர்கள் தேவ சாயலை இழந்து போனார்கள் 2. பாவவித்து அவர்களுக்குள் விதை க்கப்பட்து. 3. அதனால் நித்திய மர ணத்திற்கு உட்பட்டவர்களானார்கள். அவர்கள் வழியாக வந்த நம் யாவருக்குள்ளும் அந்த பாவ வித்து பிறப்பிலேயே இருக்கின்றது. எந்த மனித முயற்சியினாலும் அந்த பாவ வித்தை அகற்றிவிட முடியாது. எனவே மனித குலத்தின் முடிவு நித்திய மரணமாகவே இருந்தது. ஆனால் அன்புள்ள பிதாவாகிய தேவன் தாமே, மனித குலத்தை அந்த நித்திய மரணத்திலிருந்து மீட்கும்படிக்கு தம்முடைய ஒரே பேறான குமாரன் இயேசுவை, மனித குலத்தின் பாவத்திற்கு பரிகாரமாக அனுப்பினார். இயேசு பாவத்தின் பரிகாரத்தை சிலுவை மரணத்தின் வழியாக கொடுத்து தீர்த்து, மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார். அதனால் ஆண்டவராகிய இயேசுவே மனித குலம் மீட்படையும் நாமகாரணரானார். ஒருவன், ஆண்டவராகிய இயேசுவை, தன் இருதயத்தில் விசுவாசித்து, அவரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, தன் வாழ்வை அவருக்கு ஒப்படைக்கும் போது அவன் மறுபடியும் பிறக்கின்றான். இந்த இரட்சிப்பின் வழியாக தேவனு டைய பரிசுத்த வித்து அவனுக்குள் உண்டாக்கப்படுகின்றது. இவ்வண் ணமாக அவன் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாக மறுபடியும் பிறந்த குழந்தையைப் போல ஆகுகின்றான். இனி அவன் தன் பழைய பாவ வித்தின் ஜென்ம சுபாவத்திற்கு உட்பட்டவனாக இருக்கத் தேவை யில்லை. அவன் தொடர்ந்து தன் வாழ்வை ஆண்டவராகிய இயேசு காட்டிய வழியிலே வாழும் போது, நாளுக்கு நாள் தேவ சாயலிலே வளர்ச்சியடைந்து முடிவிலே பரலோகத்திலே நீடுழியாய் வாழ்வான்.

ஜெபம்:

பிறக்கச் செய்த தேவனே, இனி நான் என் வாழ்வில் ஜென்ம சுபாவத்திற்கு அடிமையாக இராமல், கிறிஸ்துவின் சாயலிலே நாளுக்கு நாள் வளர்ந்து பெருகும்படி என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 27:39-43