புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 30, 2021)

ஞான இருதயம் வேண்டும்

சங்கீதம் 90:12

நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.


இந்த வருடம் ஆரம்பித்து நான்கு மாதங்களை கடந்து வந்திருக்கின்றோம். கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பது நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு நல்லது. இந்த உலகிலுள்ள வியாபார ஸ்தாபனங்கள் மாதாந்தரம் தங்கள் ஸ்தாபனத்தின் நிலையை ஆராய்கின்றார்கள். தாங்கள் இன்னும் முன்னேற வேண்டிய இடங்களை குறித்த திட்டங்களை போட்டுக் கொள்கின்றார்கள். ஸ்தாபனங்கள் மட்டுமல்ல, குடும்பங்க ளிலே கூட மனிதர்கள் தங்கள் பொரு ளாதார நிலையை கருத்துடன் பார்க்கின்றார்கள். காரியம் அப்படியாக இருந் தால், நிலையானதும், அசைவில்லாததுமான ராஜ்யத்திற்கென்று ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் நாம், நாம் பெற்ற விலை மதிக்க முடியாத இரட்சிப்பைக் குறித்து எவ்வளவாய் கருத்துள்ளவர்களாக இருக்க வேண்டும். “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.” என்று ஆண்டவராகிய இயேசு கடைசி காலத்தைக் குறித்து முன்னறிவித்திருக்கின்றார். ஒரு கொள்ளை நோய் கிருமியானது இந்த உலகத்தை தாக்கி சுமார் ஒரு வருடம் கடந்து சென்றுவிட்டது. அப்படியானால் கொள்ளை நோய்கள் இந்த உலகிலே ஏற்படும் போது மனிதர்கள் என்ன செய்ய முடியும்? தேவ பக்தனாகிய மோசே, “எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப் போட்டோம். எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகு தியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்த மும் சஞ்சலமுமே. அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந் துபோகிறோம். உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப் படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்துகொள்ளுகிறவன் யார்? நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.” என்று கூறினார். எனவே, எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் ஆராய்ந்து பார்த்து தேவனுடைய கிருபைக்காக நன்றி செலுத்த வேண்டும். வாழ்வின் குறைக ளையும் பெலவீனங்களையும் அறிந்து அவைகளை மேற்கொள்ளும்படி எங்கள் வாழ்வை நாங்கள் ஒழுங்கு படுத்த வேண்டும்.

ஜெபம்:

அன்புள்ள பரம தந்தையே, நீர் எனக்கு தந்திருக்கும் கிருபையின் நாட்களுக்காக நன்றி. ஒவ்வொரு நாளும் உம்முடைய வருகைக்காக நான் ஆயத்தப்படும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 24:4-8