புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 28, 2021)

மகிமையின் ராஜா வருகின்றார்

வெளிப்படுத்தல் 22:12

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.


மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக, இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார். இதற்கு முன்னதாக ஆண்டவராகிய இயேசு பல தடவைகள் எருசலேமிற்குள் சென்றிருந்தார். ஆனால் இந்த நாளின் விசேஷம் என்ன? யூத மதத்தை சேர்ந்த பிரதான ஆசாரியர்கள் இயேசுவைக் கொலை செய்யும்படி வகை தேடிக் கொண்டிருந்தார்கள். இவை யாவற்றையும் அறிந்திருந்தும், தான் இந்த பூவுலகிற்கு, வந்ததையும் பிதாவின் நோக்கத்தை நிறைவேற்றும் படியும் இப்போது எருசலேமிற்குள் செல்கின்றார். மனித குலம் வாழ்வடையும்படி, நித்திய ஆக்கினையிலிருந்து விடுதலையடையும் வழியை உண்டாக்கும்படி தீர்கதரிசிகளின் முன்னுரைப்பின்படி அவர் எருசலேமிற் குள் கழுதையின் மேல் ஏறி, சாந்த குணமுள்ளவராக செல்கின்றார். உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக அவர் எருசலேமிற்குள் வந்தார். ஆனால் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்தி ருந்தும் அவர் தாழ்மையுள்ளவராக வந்த போது, அவர்களில் பலர், மகிமையின் ராஜாவாகிய இயேசு யார் என்பதை அறிய மனதில்லாதிருந்தார்கள். அதனால் இயேசு அவர்களுக்காக கண்ணீர்விட்டு அழுதார். உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது என்று கூறினார். தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த வார்த்தைகளை அன்றிருந்த ஜனங்கள் உணராமல், இயேசுவை தள்ளிவிட்டார்கள். அவர் மறுபடியும் வருவார் என்ற வாக்கை நாம் இன்று அறிந்திருக்கின்றோம். அவர் ஜெய வேந்தனாய் மத்திய வானத்திலே தோன்றுவார். எனவே அந்த நாளிலே அவருக்கு எதிர்கொண்டு போகத் தகுதியுள்ளவர்களாகும்படிக்கு பிதா வாகிய தேவனுடைய சித்தத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுவோமாக.

ஜெபம்:

நீதியின் தேவனே, கர்த்தருடைய நாளுக்கென்று நாங்கள் ஆயத்தமுள்ளவர்களாக இருக்கும்படிக்கு எங்களுடைய வாழ்வை உமக்குப் பிரியமானதாக காத்துக்கொள்ளும்படிக்கு எங்களை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 19:35-44