புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 02, 2021)

விசுவாச வாழ்க்கை

எபிரெயர் 10:38

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின் வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.


இக்கட்டும் நெருக்கமும் மனிதர்களுடைய வாழ்க்கையை சூழ்ந்து கொள்வது சகஜம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளிலே மனிதர்களுடைய மனதிலே பயமும் வேதனையும் பற்றிக் கொள்கின்றது. நாளைய நாளை எப்படி சந்திக்கப் போகின்றேன்? பிள்ளைகளுக்கு எப்படி ஆகாரம் கொடுப்பேன்? யார் எனக்கு வேலை தருவார்கள்? தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது? என்று பலவிதமாக கேள்விகள் மனதிலே தோன்றும் வேளையிலே, நீங்கள் தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசத்தை கிரியைகளிலே காண்பியுங்கள். தேவன்மேல் நாம் கொண்டுள்ள விசுவாசம் தேவ வார்த்தைகளுக்கு முரணாக செயற்படமாட்டாது. இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கும் போது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை பற்றிக் கொள்ளுங்கள். உங்களை சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளையும், அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் பற்றி தியானம் செய்வதை நிறுத்தி விட்டு சத்திய வேதத்திலுள்ள விசுவாச வீரர்களையும், அவர்களின் சாட்சியான வாழ்க்கையையும்பற்றி தியானியுங்கள். எலியாவின் நாட்க ளிலே, மூன்று வருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. இதனால் இஸ்ரவேலிலே கொடிய பஞ்சம் உண்டாயிற்று. அந்த பஞ்சத்தினால்;, எலியாவிற்கும் ஆகாரம் இல்லாமற் போயிற்று. ஆனால், அந்த நாட்களிலும் தம்முடைய தாசனாகிய எலியாவை தேவன் போஷிப்பதற்கு வழியை ஏற்படுத்தினார். தேவனாகிய கர்த்தர்தாமே, எலியாவை பராமரிக்கும்படி சாறிபாத் ஊரிலுள்ள ஒரு விதவைக்கு கட்டளையிட்டார். கொடிய பஞ்சகாலத்திலே, வழி ஏதும் இல்லாத ஒரு ஏழை விதவை எப்படி எலியாவை பராமரிப்பாள்? இது மனிதனுடைய பார்வையிலே சாத்தியமற்றது ஆனால் தேவனாலே எல்லாம் கூடும். அது போல, உங்களைச் சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளை மனித கண்களினாலே நோக்குவீர்களாக இருந்தால், நீங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளே உங்களை மேற்கொண்டுவிடும். ஆனால், தேவனுடைய வார்த்தையின் ஊடாக, விசுவாசக் கண்களால் அதைப் நோக்குவீர்களாக இருந்தால், நீங்கள் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், உங்கள் வாழ்க்கை வழியாக பிதாவாகிய தேவனுடைய நாமம் மகிமைப்படும். நீங்கள் உங்கள் ஆத்துமா ஈடேறும்படி நம் தேவனில் விசுவாசிகளாயிருக்கிறீர்களே.

ஜெபம்:

அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்று கூறிய தேவனே, இக்கட்டும் நெருக்கமுமான வேளைகளிலே, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 இராஜ 17:8-16