புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 24, 2021)

எல்லாரும் மனந் திரும்பவேண்டும்

எசேக்கியேல் 18:23

துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ?


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த தேவ பக்தியுள்ள மனிதன் அந்த ஊரிலுள்ள ஜனங்கள் பாவத்திலும், துன்மார்க்கத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு மிகவும் மனம் வருந்திக் கொண்டான். அந்த ஊரிலுள்ள பிள்ளைகளிலும் பலர் தவறான காரியங்களைச் செய்யும் போது பெரி யோர் அதை பராமுகமாக விட்டுவிட்டார்கள். அதனால் அந்த மனிதனா னவன் தன் பிள்ளைகள் வளர்ந்து அறி வடையும் நாள்வரைக்கும் அவர்களை மிகவும் கவனமாக வளர்த்து வந்தார். அவர்கள் எங்கு செல்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள், யாருடன் கல ந்து கொள்கின்றார்கள் என்பதை குறி த்து எப்போதும் எண்ணமுள்ளவராகவே இருந்து வந்தார். அதாவது, ஒரு நல்ல தகப்பனானவர் பிள்ளைகளைக் குறித்து எப்படி கருத்துள்ளவராய் இருக்க வேண்டுமோ அப்படியே தன் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக காத்து வந்தார். ஒரு நாள் இராத்திரியிலே, “தேவ கிருபையினாலே நானும் என் பிள்ளைகளும் காக்கப்பட்டு வருகின்றோம்” ஆனால் இந்த ஊரிலுள்ள ஜனங்கள் அறியாமல் அழிந்து போகின்றார்களே. அவர்கள் வாழ்விலும் நன்மை உண்டாக வேண்டும். அவர்கள் நல்வழி நடக்க வேண்டும். இயேசு வழியாக மீட்பு உண்டு என்பதை அவர்களும் அறிய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதிலே தோன்றிற்று. அன்றைய நாளிலிருந்து அந்த ஊரார் தேவ நன்மையை கண்டடையும்படி தன் பலத்திற்குற்பட்ட செயல்களை செய்து வந்தார். அது மட்டுமன்றி, ஊர் ஜனங்களுக்காக ஊக்கத்தோடே தினமும் ஜெபித்தும் வந்தார். கிடைக்கும் சந்தர்ப்பங்க ளில் தன் விசுவாசத்திலிருந்து விலகிப் போகாமல், தன் பரிசுத்த வாழ்வை சமரசம் செய்யாமலும், தன் செயல்கள் வழியாக ஜனங்களுக்குத் தேவ அன்பை வெளிப்படுத்தி வந்தார். ஆம், பிரியமானவர்களே, பாவத்தில் வாழ்ந்த நம்மை, பரிசுத்த வாழ்வு வாழும்படி ஆண்டவராகிய இயேசு வேறு பிரித்திருக்கின்றார். அந்த பரிசுத்த வாழ்வை நாம் எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ள வேண்டும். துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எனவே, முதலாவதாக கர்த்தர் நமக்குக் கொடுத்திரு க்கும் தூய வாழ்வை காத்துக் கொண்டு, அத்துடன் மற்றவர்களும் இயேசுவை அறிய வேண்டும் என்ற மனதுடையவர்களாய் நம் வாழ்க்கை வழியாக இயேசுவை யாவருக்கும் வெளிப்படுத்துவோம்.

ஜெபம்:

மீட்பின் தேவனே, நீர் எனக்குக் கொடுத்த மீட்புக்காக ஸ்தோத்திரம். என்னுடைய பரிசுத்த வாழ்க்கை வழியாக மற்றவர்களும் உம்மைக் கண்டு கொள்ளும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:9