புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 21, 2021)

நிலையானதைப் பற்றிக் கொள்ளுங்கள்

1 யோவான் 2:17

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.


குறிப்பிட்ட செயற்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்காக ஒரு உத்தியோகஸ்தர் தூர தேசமொன்றிற்குச் சென்றிருந்தார். அந்த தூர தேசத்திலே சில ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டியிருந்ததால், அந்த தேசத்திலே வீடொன்றை வாடகைக்கு எடுத்திருந்தார். குறித்த காலம் நிறைவேறிய பின்பு, அவர் மறுபடியும் தனது சொந்த தேசத்திற்கே சென்று விடுவார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தின் மேன்மையை துற ந்து, மனித குலத்தை மீட்கும்படிக்கு, இந்த உலகிலே தோன்றினார். அவர் இந்த உலகத்திலும் அதன் பொருட்களிலும் ஆசை வைக்காமல், மனித குலத்தின் ஆத்துமா மீட்படைந்து, நிரந்தர தேசமாகிய பரலோகத்திலே நித்தியமாய் வாழும்படிக்கு வழியை ஏற்படு த்துவதையே தம்முடைய இலக்காக கொண்டார். அதை அவர் பிதாவாகிய தேவனின் சித்தப்படி நிறைவேற்றி முடித்து, பரலோகத்திற்கு எழுந்தருப்போனார்; அதுபோலவே, நாம் யாவரும் வாடகை வீடாகிய இந்த உலகத்திலே வசித்து வருகின்றோம். இது எங்கள் சொந்த தேசம் அல்ல. நாம் காணும் இந்த உலகம் ஒரு நாள் அழிந்து போய்விடும். அதை உணராத மனிதர்கள் தாங்கள் இந்த பூமியில் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களில் மேன்மை பாராட்டுகின்றார்கள். நாமோ, இந்த உலகத்திற்குரியவைகளை குறித்து மேன்மை பாராட்டுகின்றவர்கள் அல்லர். இந்த உலகத்திலே வாழும் வரைக்கும் நமக்கு உணவு, உடை, இருப்பிடம் அவசியமானது. அதை பரம பிதா அறிந்திருக்கி ன்றார். நம்முடைய தேவைகளை சந்திக்கின்றார். ஆனால் நாம் அவைகளைப் பற்றிக் கொள்ளாமல், பிதாவாகிய தேவனுடைய திருச்சித்தம் நம்முடைய வாழ்வில் நிறைவேறத்தக்கதாக நம்மைப் பூரணமாக அவரிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும். உலகத்திலும் உலகத்திலுள்ளவைக ளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத் தினாலுண்டானவைகள். எனவே நிலையான பரலோகத்தையும் அதன் நீதியையும் வாஞ்சியுங்கள். அதற்கான கிரியைகளை நடப்பியுங்கள்.

ஜெபம்:

அழிவில்லாத ராஜ்யத்தின் பங்காளிகளாகும்படி என்னை அழைத்த தேவனே, பரம யாத்திரிகளாகிய நான் இந்த உலகத்தின்மேல் ஆசை வைத்து பரம இலக்கை மறந்து போகாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 21:33