புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 14, 2021)

அறியாத நேரம் வந்திடுவார்

ஏசாயா 46:4

உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்;


நாற்பது வருடங்களுக்கு மேலாக தேவ ஊழியத்தை முழு நேரமாகச் செய்து, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர், பிரசங்க வேளையிலே தவறாமல் குறிப்புக்களை எடுத்துக் கொள்வார். ஒரு மனிதன் அந்த வயது சென்ற போதரை அணுகி: ஐயா, எத்த னையோ ஆண்டுகளாக ஊழியம் செய்த நீங்கள், எவ்வளவோ வேத த்தை கற்றுத் தேர்ந்திருக்கின்றீர்கள். எனினும், இளம் போதகர்கள் பிரசங்கிக்கும் போதும் குறிப்புக்களை எடுக்கின்றீர்களே என்று அவரிடம் கூறினான். வயதான போதகர் அந்த மனிதனை நோக்கி: மகனே, நான் வேதத்தை கற்றிருக்கின்றேன், ஆனால் தேவன் இன்று என்ன கூறுகின்றார் என்பதை நான் அறிந்து அதன்படி என் வாழ்வை காத்துக் கொள்ளவேண்டும். தேவனோடு முகமுகமாய் பேசிய 120 வயது நிரம்பிய மோசேக்கும் ஒவ்வொரு நாளும் தேவ வழிநடத்துதல் அவசியமாக இருந்தது. என் ஆத்துமா கழுகுபோல இளமையாக இருப்பதற்கு தேவனுடைய வார்த்தையே அதன் ஊட்டச் சத்து. என் சரீரத்திலே பெலன் குறைந்து போவதால், தேவன் பேசுவதை மறந்து போகாமல் இருக்க குறிப்புக்கைள எடுத்துக் கொள்கின்றேன். அதுமட்டுமல்ல, சரீர பெலவீனத்தினால், பிரசங்க வே ளையிலே நான் தூங்கிவிடாதபடிக்கு குறிப்பெடுத்தல் எனக்கு உதவி செய்கின்றது என பதிலளித்தார். பிரியமானவர்களே, ஒரு வேளை நீங்கள் வேதாகம கல்லூரிக்குச் சென்று வேதத்திலே பாண்டித்தியம் பெற்று, இந்த உலகிலே உள்ள அதி உயர்ந்த பட்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதனால் நீங்கள் இனி வேதம் படிக்க தேவையில்லை என்பது பொருளல்ல. தேவனாகிய கர்த்தர் இன்று என்னோடு என்ன பேசுகின்றார்? யார் வழியாக பேசுகின்றார்? என்பதைக் குறித்து ஒவ்வொருவரும் கருத்துள்ளவர்களாக இருக்க வேண்டும். நமது கல்வி அறிவு, எத்தனை வருடங்களாக கிறிஸ்தவனாக இருக்கின்றேன், வேத பாடங்களிலே பெற்றுக் கொண்ட பட்டங்கள் போன்றவை நல்லது ஆனால் இன்று பேசப்படும் தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவி கொடுத்து கீழ்ப்படிய மனதில்லாதிருந்தால் எங்கள் கல்வியறிவாலும், பட்டத்தாலும், அனுபவத்தாலும் வரும் பிரயோஜனம் அற்பமே. நம் வாழ்நாள் முழுவதும் தேவ வழிநடத்துதல் நமக்கு இன்றியமையாதது. எனவே நம்மைத் தாழ்த்தி தேவ வசனத்திற்கு செவி கொடுப்போமாக.

ஜெபம்:

வழிநடத்தும் பரம தந்தையே, முதிர்வயதிலும் எங்களை நடத்துவேன் என்று கூறியிருக்கின்றீர். நீர் என்னை நடத்திச் செல்லும்படிக்கு தாழ்மையும் கீழ்ப்படிதலுமுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:12